நாமக்கல்: கனரக வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகத்தில் இன்று 6 லட்சம் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் லாரி, ட்ரெய்லர், எல்பிஜி காஸ் டேங்கர் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். மணல் குவாரிகளை திறக்க வேண்டும். ஆன்லைன் வழக்குகளை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (9ம் தேதி) ஒரு நாள் லாரி ஸ்டிரைக் நடக்கிறது.
இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி லாரிகள் அதிகம் நிறைந்த நாமக்கல் பகுதியில் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு எல்பிஜி காஸ் டேங்கர் லாரிகள், மணல் லாரிகள், ட்ரெய்லர் லாரிகள் சங்கம் ஆதரவு அளித்துள்ளதால் அந்த லாரிகளும் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று சுமார் 6 லட்சம் கனரக வாகனங்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
நாமக்கல் பகுதியில் லாரித்தொழில் தொடர்புடைய லாரி பட்டறைகள், மெக்கானிக் பட்டறைகள், ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. அவைகளும் லாரிகள் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு அளித் துள்ளன. இதனால் நாமக்கல் நகரில் உள்ள பெரும்பாலான லாரி பட்டறைகளில் இன்று பணிகள் நடைபெறவில்லை. இதுபோல தமிழகத்தில் இயக்கப்படும் சுமார் 2 ஆயிரம் எல்பிஜி காஸ் டேங்கர் லாரிகளும் இன்று இயக்கப்படவில்லை. அவைகள் பாட்டிலிங் பிளாண்டுகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் சுமார் 55 ஆயிரம் மணல் லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் செல்லராசாமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ள இந்த போராட்டத்துக்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முழு ஆதரவு அளிக்கிறது. இன்று தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் மணல் லாரிகள் இயக்காமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு பின் பெரும்பாலான அரசு மணல் குவாரிகள் மூடி கிடக்கிறது. இந்த மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும். லாரி உரிமையாளர்கள், டிரைவர்களின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்க வேண்டும் என்றார்.
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தனராஜ் கூறுகையில், தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சம் கனரக வாகனங்கள் இன்று நடைபெறும் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில கலந்து கொண்டுள்ளன. எங்களின் பிரதான கோரிக்கை குறித்து அரசு எங்களை அழைத்து பேசவில்லை. அரசுக்கு எங்களது நியாயமான கோரிக்கையை தெரிவிக்கும் வகையில் இன்று அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றார். தென்மண்டல எல்பிஜி காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சுந்தர்ராஜன் கூறுகையில், சங்க உறுப்பினர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதல் தமிழகத்தில் சுமார் 2 ஆயிரம் எல்பிஜி காஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படவில்லை என்றார்.