சென்னை: 6ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என, அனைத்து துறைமுக டிரைலர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். சென்னை துறைமுகத்திலிருந்து பொருட்களைக் கொண்டு செல்லவும் கொண்டு வருவதற்கும் கன்டெய்னர் லாரிகள் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சில லாரி சங்கங்கள் 4 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்தன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து துறைமுகம் டிரைலர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு சார்பில், காசிமேடு துறைமுகம் நுழைவாயிலில் ஒன்று கூடி வரும் 6ம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தத்தில், ‘‘எங்கள் சங்கத்தினர் கலந்துகொள்ள மாட்டார்கள்’’ என்று செய்தியாளர்களிடம் கூறினர். இதுகுறித்து, கூட்டமைப்பின் சார்பில், நிர்வாகி மனோகரன் பேசுகையில், ‘‘வரும் 6ம் தேதி கன்டெய்னர் லாரிகள் ஓடாது என்று சில சங்கங்கள் அறிவித்துள்ளன. அவர்கள் தன்னிச்சையாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே 13 ஆண்டுகளாக கன்டெய்னர் லாரி வாடகை உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. சங்கம் என்ற பெயரை வைத்துக் கொண்டு எந்த ஒரு விஷயத்தையும் முடித்து தரவில்லை.
தற்போது அவர்கள் அறிவித்திருக்கும் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தர மாட்டோம். வழக்கம்போல் எங்களுடைய கூட்டமைப்பு சார்பில், கன்டெய்னர் லாரிகள் டாரஸ் லாரிகள் இயக்கப்படும். சாலை வரி உயர்வு என்பது இன்னும் அமலுக்கு வரவில்லை. அதனை காரணம் காட்டுவது தவறு. நம்முடைய பிரச்னைகளை அரசிடம் சுமுகமாக பேசி முடித்துக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு அரசுக்கு எதிராக செயல்படுவது கண்டிக்கத்தக்கது,’’ என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து லாரி உரிமையாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ‘‘ஓடும், ஓடும்! வரும் 6ம் தேதி லாரிகள் வழக்கம் போல் ஓடும்,’’ என்று கோஷங்களை எழுப்பி கலைந்து சென்றனர். இதனால் துறைமுகம் நுழைவாயில் பகுதியில் பரபரப்பு நிலவியது.