திருப்பூர்: செங்கப்பள்ளி அருகே நூல் பண்டல்கள் ஏற்றி வந்த லாரி தீ விபத்துக்குள்ளானதில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள நூல்கள் சேதமாகியுள்ளன. அரியானா மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்திடம் நூல் பண்டல்களை ஆர்டர் செய்து கொண்டுவந்தபோது தீப்பிடித்தது ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் நாகேந்திரன் என்பவருக்கு சொந்தமான மில் உள்ளது. இந்த மில்லுக்கு தேவையான நூல்களை பல்வேறு மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்து வருகிறார். அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் ஒரு நிறுவனத்திடம் நூல் பண்டல்களை ஆர்டர் செய்துள்ளார்.
இதையடுத்து அந்த நிறுவனம் நாகேந்திரன் ஆர்டர் செய்த நூல் பண்டல்களை சரக்கு லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். லாரியை ஹாரிப் என்பவர் ஒட்டி வந்தார். இந்த நிலையில் சரக்கு லாரி திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே வந்தபோது லாரியிலிருந்து கரும்பு புகை கிளம்பியது உடனடியாக சுதாரித்த ஓட்டுனர் லாரியை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.
அதற்குள் லாரியின் பின்பகுதியில் தீ மளமளவென பரவியது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் இதை எடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சரக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட 15 லட்சம் மதிப்பிலான நூல் பண்டல்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்து குறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.