சென்னை: லாரி பைக் மோதலில் தம்பதி உட்பட 5 பேர் பலியாகினர். வேலூர் கஸ்பாவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(50). இவர் வேலூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ஆண் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி எலிசபெத்(47). மூன்று மகள்கள் உள்ளனர். நேற்று மாலை 3.30 மணியளவில், சித்தூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரியில் நர்சிங் படித்து வரும் மகள் பெட்டினாவை பார்க்க சுரேஷ்குமார், மனைவியுடன் பைக்கில் சென்றார்.
காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை பகுதியில் முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றபோது எதிர்திசையில் மற்றொரு கன்டெய்னர் லாரி வரவே பைக்கை இடதுபுறம் திருப்பினார். அப்போது முந்தி செல்ல முயன்ற கன்டெய்னர் லாரியில் பைக்குடன் சிக்கி தம்பதியர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் ஆனத்தூர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் லோகேஷ் (23), கோகுல் (25), பாரதி (29). நண்பர்களான இவர்கள் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கூலி தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர். கடந்த வாரம் லோகேஷ் பிறந்தநாள் விழாவுக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர். நேற்று மாலை மூவரும் ஒரே பைக்கில் பண்ருட்டி சென்றுவிட்டு, இரவு 8 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். மணம்தவிழ்ந்தபுத்தூர் கிராமம் அருகே சென்றணபோது எதிரே வேகமாக வந்த டாரஸ் லாரி, பைக் மீது மோதியதில் 3 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.