*அதிகாலை என்பதால் தப்பித்த மாணவர்கள்
வேலூர் : வேலூர் பாகாயம் அருகே வைக்கோல் லாரி ஒன்று தறிக்கெட்டு ஓடி அரசுப்பள்ளி சுற்றுச்சுவரை இடித்து தள்ளி உள்ளே புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து வைக்கோல் ஏற்றிய லாரி ஒன்று நேற்று அதிகாலை வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை அதன் உரிமையாளரான திருக்கோவிலூரை சேர்ந்த முரளி(50) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவரும் உடன் வந்தார்.
பாகாயம் அடுத்த இடையன்சாத்து அரசு உயர்நிலைப்பள்ளி அருகே வரும்போது லாரி டிரைவர் முரளி, சற்று கண்ணயர்ந்ததாக தெரிகிறது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மோதித் தள்ளி, மழைநீர் வடிகால்வாய் மீது ஏறி, இடையன்சாத்து அரசு உயர்நிலைப்பள்ளியின் காம்பவுண்ட் சுவர் மற்றும் இரும்பு கேட்டை இடித்துத்தள்ளி பள்ளி வளாகத்துக்குள் புகுந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் முரளி மற்றும் உடன் வந்த கிளீனருக்கு தலை மற்றும் கால்களில் படுகாயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த பாகாயம் போலீசார் டிரைவரையும், கிளீனரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காலை 8 மணிக்கு மேல் நடந்திருந்தால் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
அதிர்ஷ்டவசமாக அதிகாலை நேரத்தில் நடந்ததால் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை என்று விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.இதுபற்றி பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடனுக்குடன் மின்கம்பம் மாற்றம்
அதிகாலையில் பள்ளி அருகே நடந்த இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகளும், பணியாளர்களும் விரைந்து சென்று உடைந்த மின்கம்பத்தை அகற்றி, உடனடியாக புதிய கம்பத்தை பொருத்தியதுடன், மின்சப்ளையை இயல்பு நிலைக்கு திரும்பச் செய்தனர்.