*வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை
திட்டக்குடி : கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் அண்ணா பேருந்து நிலையம் உள்ளது. பேருந்து நிலையம் அருகே அண்ணா காய்கறி மார்க்கெட் இயங்கி வந்தன. காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டி பல ஆண்டுகள் ஆகின்றன.
இந்த கட்டிடம் சேதமடைந்து இடிந்து விழும் சூழ்நிலையில் இருந்தன. இதனையடுத்து தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் மார்க்கெட் கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.மூன்று கோடி 12 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினர்.
இந்நிலையில் அந்த கடையில் இயங்கிய வியாபாரிகள் தள்ளுவண்டி அமைத்து பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து நூற்றுக்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பாக மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் வியாபாரிகள் அங்கு சென்று வியாபாரம் செய்யாமல் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் பேருந்து நிலையத்திற்குள் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளே செல்ல சிரமப்பட்டு வருகின்றன.
மேலும் வெளியூரிலிருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் திட்டக்குடி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதற்கு மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். அதுமட்டுமின்றி ஒரு சில பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு உள்ளே வர முடியாமலும், பேருந்து நிலைய முன்பகுதியிலேயே வளைந்து செல்வதாலும் கிராமப்புற செல்லும் பயணிகள் பேருந்துகளை தவற விடுகின்றனர்.
இதுகுறித்துஒருவர் கூறுகையில், எங்கள் ஊர் திட்டக்குடியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. எங்கள் கிராமத்திற்கு மணிக்கணக்கில் தான் பேருந்துகள் வந்து செல்கிறது. அந்த பேருந்தும் எப்போது வருது என்று எங்களுக்கு தெரியவில்லை.
தாங்கள் பேருந்துக்காக காத்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் சில ஆக்கிரமிப்புகளால் பேருந்து வளைவதுகூட எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் முதியவர்கள். அந்த பேருந்தை கண்டுபிடித்து ஏறுவதற்குள் மிகவும் சிரமப்படுகிறோம்.
பேருந்தை அந்தந்த தடத்தில் நிறுத்தி இருந்தால் தாங்கள் அறிந்து ஏறி கொள்வோம். ஆனால் பேருந்து நிலையம் முழுவதும் தள்ளுவண்டி ஆக்கிரமிப்பு இருப்பதால் நாங்கள் நடந்து செல்ல கூட சிரமமாக உள்ளது என தெரிவித்தார்.
தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ள மாற்று இடத்தில் தள்ளு வண்டிகளை எடுத்து சென்று வியாபாரம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமித்துள்ள தள்ளு வண்டிகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.