ஆலந்தூர்: குடிநீர் வழங்கக்கோரி திரிசூலம் ஊராட்சி மக்கள் மறியல் நடத்தினர். சென்னை திரிசூலம் ஊராட்சிக்கு உட்பட்ட உழைப்பாளர் நகர் பகுதியில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் நேற்றிரவு திரண்டுவந்து மூவரசன்பட்டு பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது. இது குறித்த தகவல் கிடைத்ததும் மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் முத்துராஜா, பழவந்தாங்கல் இன்ஸ்பெக்டர் ரெங்கநாதன் ஆகியோர் போலீசாருடன் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.
குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அப்போது பொதுமக்கள், ‘’ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டுவந்ததால் சாலை மறியலில் ஈடுபட்டோம். அதிகாரிகள் எங்களுக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்’’ என்றனர். இதையடுத்து திரிசூலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அந்தோணி, ‘’இன்று காலை 10 மணிக்குள் குடிநீர் விநியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்’ என உறுதி அளித்ததையடுத்து சாலை மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.