நன்றி குங்குமம் டாக்டர்
சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கலுக்கும் சிறந்த தீர்வை தரும் மூலிகைகளில் முக்கியமானது திரிபலா. இது உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டு வலி ஆகியவற்றை வராமல் தடுக்கும் தன்மையுடையது. இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்படாத குடும்பங்களே இல்லை எனக் கூறலாம். அந்தளவிற்கு குடும்பத்தில் ஒருவர் அல்லது இருவருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. சர்க்கரைநோய் சிகிச்சையில் உணவுக் கட்டுப்பாடுடன் ஆயுர்வேத சிகிச்சைகளும் எடுத்துக் கொண்டால் நல்ல பலன் தரும். இதனால் சர்க்கரை நோயாளிகள் நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும். அந்தவகையில், சர்க்கரை நோயாளிகளுக்கு திரிபலா ஒரு வரப்பிரசாதமாகும். இதனை மூன்று விதங்களில் உட்கொள்ளலாம். அவை:
சர்க்கரையை கட்டுப்படுத்தும் திரிபலா பொதுவாக, சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்றவற்றில் திரிபலா சூரணம் முக்கியப் பங்கு வகிக்கிறது. திரிபலா என்பது நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சேர்ந்த கலவையாகும். இது சர்க்கரை நோய்க்கும், மலச்சிக்கல் பிரச்னைக்கும் சிறந்த தீர்வை தருகிறது. மேலும், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், மூட்டு வலி போன்றவை வராமலும் தடுக்கிறது. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இந்த மூன்றிலும் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து இருப்பதால் அனைவரும் பயன்படுத்தலாம். கணைய ஆரோக்கியத்தை மேம்படுத்தி இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இது சர்க்கரையை ஜீரணிக்க உதவுகிறது.
திரிபலா சாப்பிடும் முறைகள்:
நெய்யுடன் கலந்து சாப்பிடுவது சுத்தமான நெய்யில் திரிபலாவை கலந்து சாப்பிடலாம். இது குடல் மற்றும் குடல்களின் சுவர்களை சுத்தப்படுத்துகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது. இதனால், ரத்த ஓட்டம் சீராகி சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
மோரில் கலந்து அருந்துவது
திரிபலாவை மோரில் கலந்து குடித்தால், உடல் நலம் பெருகும். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் செரிமானமும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் மதிய உணவிற்கு பிறகு 1 டம்ளர் மோரில் 1 தேக்கரண்டி திரிபலா கலந்து குடித்து வந்தால் சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவும்.
திரிபலா கஷாயமாக அருந்துதல்
மிதமான வெந்நீரில் கலந்து கஷாயமாக எடுத்துக் கொள்ளலாம். இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு வயதுக்கு மேலான குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் திரிபலா சூரணத்தை உட்கொள்ளலாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ ஆலோசனை பெற்றே திரிபலா உட் கொள்ள வேண்டும்.
தொகுப்பு: பொ. பாலாஜிகணேஷ்