போர்ட் ஆஃப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபேகோ குடியரசு நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத் பிஸ்ஸேசருக்கு கும்பமேளா புனித நீரை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கினார். பிரதமர் மோடி 8 நாட்களில் 5 நாடுகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணம் மேற்கொண்டது. முதல் கட்டமாக அவர் மேற்கு ஆப்ரிக்க நாடான கானாவுக்கு நேற்று முன்தினம் சென்றடைந்தார். கானாவில் 2 நாள் பயணத்தை நேற்று நிறைவு செய்த பிரதமர் மோடி 2ம் கட்டமாக நேற்று மாலை டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டிற்கு சென்றார். அங்கு பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத் பிஸ்ஸேசர் மோடிக்கு வாழை இலையில் விருந்து வைத்தார்.
இந்த விருந்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, கமலா பெர்சாத்துக்கு அயோத்தி ராமர் கோயில் மாதிரியையும் சரயு நதி புனித நீர் மற்றும் மகா கும்பமேளா புனித நீர் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கியுள்ளார். இந்த பரிசுகள், இந்தியாவுக்கு டிரினிடாட் மற்றும் டொபேகோவுக்கும் இடையேயான ஆழமான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பிணைப்புகளை அடையாளப்படுத்துவதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, டிரினிடாட் டொபாகோ நாடாளுமன்றத்திலும் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். அதைத் தொடர்ந்து, 3ம் கட்டமாக அர்ஜென்டினா செல்லும் பிரதமர் மோடி, வரும் 6, 7ம் தேதிகளில் பிரேசிலில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.