புதுடெல்லி: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, பிஜு ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி. பினாகி மிஸ்ராவை இந்த வாரம் ஜெர்மனியில் திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகர் எம்.பி.யாக இருப்பவர் மஹுவா மொய்த்ரா. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் மக்களவையில் அதிரடி பேச்சுகளுக்கு சொந்தக்காரர். இவர், ஒடிசாவின் பூரி தொகுதியின் முன்னாள் எம்.பியான பினாகி மிஸ்ராவை மணந்தார். 50 வயதான மஹுவா மொய்த்ராவும், 65 வயதான பினாகி மிஸ்ராவும் திருமண உடையுடன் கைக்கோர்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 1974ஆம் ஆண்டு அக்.12ல் அசாமில் பிறந்த மஹுவா மொய்த்ரா வங்கியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
இவர் டேனிஷ் நிதியாளர் லார்ஸ் ப்ரோர்சனை மணந்தார். அந்த திருமணம் விவாகரத்தில் முடிந்தது. 2019 ல் மேற்கு வங்கத்தில் உள்ள கிருஷ்ணாநகர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் அவர் 2024ல் மீண்டும் அதே தொகுதியிலிருந்து எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிசாவின் பூரியில் 1959ஆம் ஆண்டு அக்.23ல் பிறந்த பினாகி மிஸ்ரா, ஒரு மூத்த அரசியல்வாதி மற்றும் மூத்த வழக்கறிஞர் ஆவார். அவர் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் பி.ஏ (ஹானர்ஸ்) பட்டமும், டெல்லி பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி பட்டமும் பெற்றுள்ளார்.
1996ல் பூரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற அவர், பின்னர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளத்தில் சேர்ந்து 2009, 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் பூரி தொகுதியில் தொடர்ந்து வென்றார். பினாகி மிஸ்ரா 1984ல் சங்கீதா மிஸ்ராவை மணந்தார். ஆனால், பின்னர் அவர்கள் விவாகரத்து பெற்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.