கொல்கத்தா: பெண் மருத்துவர் பலாத்கார கொலை சம்பவத்தில் நாங்கள் ஊமை பொம்மைகளா? என்று பாஜகவுக்கு திரிணாமுல் எம்பி பதிலடி கொடுத்தார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்த முதுகலை பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தொடர்பாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதுகுறித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா அளித்த ேபட்டியில், ‘இந்த விவகாரத்தில் மேற்குவங்க அரசு எதையும் மறைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பிக்களை ஊமை பொம்மைகள் என்று பாஜக அழைப்பது தவறானது.
மாநில அரசும், முதல்வர் மம்தா பானர்ஜியும், பெண் எம்பிக்களும் சில விசயங்களை மூடிமறைப்பதாக குற்றம் சாட்டியதை மறுக்கிறேன். சம்பவம் நடந்தபோது, முதல்வர் மம்தா பானர்ஜி ஜார்கிராம் மேதினிபூரில் இருந்தார். உடனடியாக அவர் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தினரிடம் பேசினார். கொல்கத்தா திரும்பிய அவர், குடும்பத்தினரை சந்தித்தார். சம்பவம் நடந்த 12 மணி நேரத்திற்குள் பிரதான குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். மாநில அரசு எதையும் மறைக்கவில்லை. இந்தியாவின் ஒரே பெண் முதல்வரான மம்தா பானர்ஜி, எப்போதும் பெண்களின் நலனுக்காக பாடுபடுகிறார். இந்த சம்பவத்தை அரசியலுடன் இணைத்து பேசுவது சரியல்ல. எனவே எங்களை ஊமை பொம்மைகள் என்று கூறுவது தவறு’ என்று கூறினார்.