திருச்சி: உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் நேற்று காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நிருபர்களிடம் கூறுகையில், ‘புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்க முடியாது’ என்று தெரிவித்தார். திருச்சி விமான நிலையத்தில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம், தர்மேந்திர பிரதான் பேட்டி குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி. நாங்கள் தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறோம். ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. தயவுசெய்து கல்வியில் நீங்கள் அரசியல் செய்யாதீர்கள். இதில் தமிழ்நாட்டின் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது. 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை பணியாளர்களுக்கு நாங்கள் ஊதியம் வழங்க வேண்டியுள்ளது.
ஒரு மாதத்திற்கு ரூ.76 கோடி மதிப்பிலும், ஒரு ஆண்டுக்கு ரூ.912 கோடி மதிப்பிலும் அவர்களுக்கு ஊதியம் வழங்கி வருகிறோம். ஐசிடி மூலமாக பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டு வருவது, 25% குழந்தைகள் தனியார் பள்ளியில் கல்வி பயில செய்வதற்காக என அரசு வழங்கும் தொகை மட்டும் ரூ.400 கோடியை தாண்டும். இதை ஒன்றிய அரசும், மாநில அரசும் 60%, 40% என ஏற்கிறது. இதை நாம் கூறினால், ஏன் மும்மொழி கொள்கையை நீங்கள் ஏற்றுக்கொண்டால் என்ன? எனக்கேட்கின்றனர். தமிழ்நாட்டு மண்ணின் உணர்வு தனிப்பட்டது.
மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்வதில் என்ன உங்களுக்கு பிடிவாதம் எனக்கேட்கின்றனர். அது நமக்கு தேவையிலாத ஒன்று என்பதால் தான் அறிஞர் அண்ணா காலத்தில் இருந்தே இருமொழி கொள்கையை நாம் பின்பற்றி வருகிறோம். கல்வி என்பதை எடுத்துக்கொண்டோமானால் அவர்கள் கூறும் சமக்ரசிக்ஷா அபியான் என்ற திட்டத்தில் கூறப்படும் புறநிலை கூறுகளில் கேரளா 20க்கு 20 இடங்களை பிடித்து முதல் இடத்திலும், தமிழ்நாடு 19 இடங்களையும் பிடித்துள்ளது. 8 இடங்கள் பெற்றுள்ள குஜராத், 3 இடங்கள் மட்டுமே பெற்றுள்ள உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் வெறும் 2 இடங்கள் மட்டுமே பிடித்துள்ள பீகார் ஆகிய மாநிலங்களுக்கெல்லாம் உங்கள் நிதியை வழங்கியுள்ளீர்கள்.
மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக்கூறுவது, மற்றொரு மொழிப்போருக்கு வழி வகுக்கும் என்பதை நான் பகிரங்கமாக கூறிக்கொள்கிறேன். எனவே இதில் காலம் தாழ்த்தாமல், ஏதோதோ சாக்கு போக்கு கூறாமல் எங்களுக்கு வரவேண்டிய 2 ஆயிரத்து 152 கோடியை உடன் விடுவிக்க வேண்டும். அவர்களின் திட்டத்தை ஏற்காவிட்டால் நிதியளிக்க சட்டத்தில் இடம் இல்லை என்பதை ஏற்க முடியாது. 2018ம் ஆண்டு முதல் எஸ்எஸ்ஏ என்ற இந்த நிதி வழங்கப்பட்டு வருகிறது. இப்போது 2023க்கு மட்டும் தர மறுப்பதும், சட்டம் குறித்து பேசுவதும் சரியல்ல. இந்த சட்டம் முன்னர் எங்கே சென்றது இவ்வாறு அவர் கூறினார்.
* பறித்த உரிமையைக் கேட்கிறோம்
அறிஞர் அண்ணா உரையை பகிர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க,எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெல்ல மெல்ல வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்? மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்? அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம். உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல, இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல. எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல. இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும். – பேரறிஞர் அண்ணா இவ்வாறு கூறி உள்ளார்.