* தடித்தனத்தை தமிழர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்
சென்னை: மும்மொழி கொள்கையை ஏற்கும் வரை நிதி கிடையாது என ஒன்றிய அரசு பிளாக்மெயில் செய்கிறது. ஒன்றிய அரசு செய்யும் தடித்தனத்தை தமிழர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையையும், அதன்வழி மும்மொழிக் கொள்கையையும் திணிப்பதை நிராகரித்த காரணத்துக்காக, தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய ரூ.2,152 கோடி நிதியை ஒன்றிய அரசு பறித்துள்ளது. அதாவது அந்த நிதி குஜராத், உத்தரபிரதேசம் போன்ற பிற மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘தமிழ்நாட்டுக்கு எதிரான ஒன்றிய பாஜ அரசின் அட்டூழிய மனப்பான்மைக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. தேசிய கல்விக் கொள்கையையும், அதன்வழி மும்மொழிக் கொள்கையையும் திணிப்பதை நிராகரித்த காரணத்துக்காக, அப்பட்டமான அச்சுறுத்தல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய 2,152 கோடி ரூபாயைப் பறித்து, தற்போது வேறு மாநிலங்களுக்கு அளித்துள்ளனர்.
தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்களைத் தண்டிக்கும் நோக்கில் இத்தகைய வலுக்கட்டாயமான செயலைச் செய்கின்றனர். இந்திய வரலாற்றில் வேறு எந்த அரசும் ஒரு மாநிலத்தை அரசியல் ரீதியாகப் பழிவாங்குவதற்காக மாணவர்களின் கல்விக்குத் தடை ஏற்படுத்தும் அளவுக்குக் இரக்கமில்லாமல் நடந்துகொண்டதில்லை. தமிழ்நாட்டு, தமிழ் மக்கள் மீதான வெறுப்பு மற்றும் நமக்கு இழைக்கப்படும் அநீதியின் முழு உருவம் பா.ஜ. என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது” என்று ஏற்கனவே கண்டனம் தெரிவித்து கடுமையான அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “மும்மொழி கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும்போது, தமிழ்நாடு ஏற்க மறுப்பது ஏன்?”. தமிழ்நாட்டுக்கு நிதி நிலுவையில் இருப்பது எனக்கு தெரியும். ஆனால், புதிய தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாடு ஏற்று கொண்டால்தான் நிதி விடுவிக்கப்படும். மும்மொழி கொள்கையை ஏற்கா விட்டால் நிதி ஒதுக்க சட்டத்தில் இடமில்லை. அரசியல் காரணங்களுக்காகவே மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது” என்று பேசியிருந்தார்.
ஒன்றிய கல்வித்துறை அமைச்சரின் இந்த பேச்சுக்கு தமிழகத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கடும் கண்டனத்தை தெரிவித்து பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? என ஒன்றிய கல்வி அமைச்சரால் கூற முடியுமா?.
மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல! “மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று பிளாக்மெயில் செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பது போல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் பதிவில் கூறியுள்ளார்.
ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் இந்தப் பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக பொதுச்ெசயலாளர் பிரேமலதா, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
* உங்கள் தனிச்சொத்தைக் கேட்பது போல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டி இருக்கும்