சென்னை: தேசிய கல்வி கொள்கையை முழுமையாக அமல்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழ்நாட்டிற்கான ‘சமக்ர சிக் ஷா’ திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப்பட மாட்டாது என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் சமீபத்தில் தெரிவித்திருப்பது கவலை அளிக்கிறது. லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக்ஷா’ விஷயத்தில் பிரதமர் மோடி தலையிட்டு, தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு வழங்கும் நிதியை தற்போது நிறுத்தி வைத்துள்ளது. ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை ஏற்காததால்தான் நிறுத்தி வைத்துள்ளது தெரியவந்தது. இது குறித்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறும்போது, இந்தியை ஏற்றுக் கொண்டால்தான் நிதி வழங்க முடியும் என்றார். இதற்கு கண்டனங்கள் எழுந்தவுடன், மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்குவோம் என்றார். ஆனால் நிதி வழங்க ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: ‘‘தேசிய கல்வி கொள்கை-2020ஐ முழுமையாக அமல்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழ்நாட்டிற்கான ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கப்பட மாட்டாது” என்று ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் சமீபத்தில் தெரிவித்திருப்பது கவலை அளிக்கிறது. இது தமிழ்நாட்டில் உள்ள மாணவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெருத்த கவலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் கல்வி மற்றும் சமூக சூழலில், இருமொழிக் கொள்கை நீண்டகாலமாக ஆழமாக வேரூன்றியுள்ளது.
அதனை பின்பற்றுவதில் தமிழ்நாடு எப்பொழுதும் உறுதியாக உள்ளது. அலுவல் மொழிகள் விதி, 1976ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, “அலுவல் மொழிச் சட்டம், 1963”ஐ செயல்படுத்துவதில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நவோதயா வித்யாலயா போன்ற ஒன்றிய அரசு பள்ளிகள் மும்மொழிக் கொள்கையை பின்பற்றுவதால் தான், தமிழ்நாட்டில் அவை நிறுவப்படவில்லை. இந்த இரு மொழிக் கொள்கை மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட முற்போக்கு கொள்கைகளின் காரணமாக, கடந்த அரை நூற்றாண்டில் தமிழ்நாடு அடைந்துள்ள மகத்தான முன்னேற்றங்கள் மற்றும் அதற்கு வித்திடும் முன்முயற்சிகளை காண முடிகிறது.
எங்கள் இருமொழிக் கொள்கையில் எந்தவொரு மாற்றமும் கொண்டுவர உத்தேசிப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் பெரிய அளவில் பயனளிக்காது என்பதை மேலே உள்ளவை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
இதுதவிர, தேசிய கல்விக் கொள்கை-2020ல் குறிப்பிடப்பட்டுள்ள சில விதிகள் குறித்து 27.8.2024 நாளிட்ட தனது கடிதத்தின் மூலம் தமிழ்நாடு அரசின் ஆழ்ந்த கவலைகள் முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 27.9.2024 அன்று தனிப்பட்ட முறையில் விரிவான கோரிக்கை மனுவாக பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இருப்பினும், பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், ‘சமக்ரா சிக் ஷா’ திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய நிதி ஒன்றிய அரசால் வழங்கப்படாமல் உள்ளது கவலை அளிக்கிறது.ஒன்றிய அரசின் இரண்டு வெவ்வேறு திட்டங்களான ‘சமக்ர சிக் ஷா’ திட்டத்தையும், தேசிய கல்விக் கொள்கையை பிரதிபலிக்கும் பி.எம்.ஸ்ரீ. திட்டத்தையும் ஒன்றாக பொருத்திப் பார்ப்பது என்பது அடிப்படையில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என்பதைத் தான் மீண்டும் வலியுறுத்துகிறேன். தற்போது ஒரு மாநிலத்தில், அங்குள்ள காலச் சூழலுக்கேற்ப பின்பற்றப்பட்டு வரும் கொள்கைகளுக்கு எதிராக, அந்த மாநிலத்தை கட்டாயப்படுத்துவதற்கு, நிதி வழங்கும் விவகாரங்களில் ஒன்றிய அரசு அழுத்தம் தரும் இத்தகைய முயற்சி, கூட்டாட்சி தத்துவத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும்.
இது, குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் தங்களது கல்வி கொள்கைகளை வடிவமைக்கும் மாநிலங்களின் உரிமைகளை பெருமளவில் பாதிக்கும். தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்படாததால், ஆசிரியர்கள் சம்பளம், மாணவர்களுக்கான நலத் திட்டங்களை உள்ளடக்கிய கல்வி முன்னெடுப்பு முயற்சிகள், கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பயிலும் வறிய நிலையில் வாழும் மாணவர்களுக்கான கல்வித் தொகையை திருப்பிச் செலுத்துதல் மற்றும் தொலைதூர பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கான போக்குவரத்து போன்றவற்றிற்கான பல முக்கிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில், லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, இந்த விஷயத்தில் பிரதமர் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்த திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படாமல் உள்ளதால் ஏற்பட்டுள்ள வருந்தத்தக்க சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தேசிய கல்விக் கொள்கை-2020ஐ செயல்படுத்துவதோடு ‘சமக்ர சிக் ஷா’ திட்டத்தை பொருத்திப் பார்க்காமல், 2024-25ம் நிதியாண்டில் இந்த திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ.2,152 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடி, இப்பொருண்மையின் தீவிரத்தை உணர்ந்து, தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஒன்றிய அரசின் இரண்டு வெவ்வேறு திட்டங்களான ‘சமக்ர சிக் ஷா’ திட்டத்தையும், தேசிய கல்விக் கொள்கையை பிரதிபலிக்கும் பி.எம்.. திட்டத்தையும் ஒன்றாக பொருத்திப் பார்ப்பது என்பது அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதைத் தான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.