Wednesday, June 18, 2025
Home மருத்துவம்ஆரோக்கிய வாழ்வு ட்ரிக்கர் பாயின்ட்ஸ் எனும் வலிக் கட்டுப்பாட்டு மையங்கள்!

ட்ரிக்கர் பாயின்ட்ஸ் எனும் வலிக் கட்டுப்பாட்டு மையங்கள்!

by Nithya

நன்றி குங்குமம் டாக்டர்

வலியை வெல்வோம்!

இயன்முறை மருத்துவர் ந.கிருஷ்ணவேணி

மார்பு வலி என்று மருத்துவரிடம் செல்பவர்களிடம் இசிஜி முதலான பரிசோதனைகளை பார்த்துவிட்டு, அதில் எந்தக் குறைபாடோ அறிகுறியோ தென்படவில்லை. ஆகவே, இது சாதாரண தசை வலி (muscle pain) தான் மருந்து, மாத்திரைகள் எடுத்தால் சரியாகிவிடும் என்று மருத்துவர் கூறுவதை கவனித்திருப்போம்.இதேபோல் இடுப்பு, முதுகுவலிக்காகச் சென்றாலும் நரம்பில், டிஸ்க்கில் எந்த பிரச்னையும் இல்லை. இது, மெக்கானிக்கல் பெய்ன் (Mechanical pain) அல்லது தசைவலி (muscle pain) தான் என்று அதற்கான சிகிச்சையை பரிந்துரை செய்வதையும் பார்த்திருப்போம்.

தற்போது வலி என்று சென்றால் மஸில் பெயின், மெக்கானிக்கல் பெயின் என்பதைத் தாண்டி ‘ட்ரிக்கர் பாயின்ட்ஸ்’ன்னு ஏதோ சொல்றாங்களே, அது என்னவாக இருக்கும் என உங்களுக்குள்ளே கேள்வி தோன்றி இருக்கும். இந்தக் கட்டுரை உங்கள் கேள்விக்களுக்கான பதிலை உரைக்கும். 1940 மற்றும் 1950-களில், ஓப்பன் ஹார்ட் சர்ஜரிக்கு பின்பும் நோயாளிகளுக்கு கடுமையான மார்பு வலி இருந்தது. இது அறுவைசிகிச்சைக்குப் பின் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்களுக்கு பெரும் சவாலை உருவாக்கியது.

டாக்டர் ஜேனட் .ஜி. ட்ராவல் என்பவர் இருதய அறுவைசிகிச்சைகளுக்குப் பின்பு தனது நோயாளிகளை கவனித்தபோது, பலர் மார்பு தசைகள் (Pectoral Muscles) மற்றும் தோள்பட்டை தசைகளில் (Shoulder Girdle Muscles) வலியை அனுபவிப்பதை கவனித்தார். நோயர்களின் மார்பு மற்றும் தோள்பட்டை தசைகளில் உள்ள குறிப்பிட்ட புள்ளிகளை அழுத்தும்போது, வலி உள்ளூர மற்றும், பரவலாகவும் உருவாவதையும் கவனித்தார்.

அவரது நோயாளிகளில் பலர் இதய வலி என்று நினைத்தவை, உண்மையில் தசைகளில் உள்ள ட்ரிகர் பாயின்ட்ஸால் உருவானவைதான் என்பதையும் கண்டறிந்தார். இருதய வலி மற்றும் தசை வலிகளுக்கு இடையேயான ஒற்றுமைகளை ஆராய்ந்து, ட்ரிகர் பாயின்ட்ஸ் மூலம் உருவாகும் ‘ரெஃபர்டு பெயின்’ (Referred Pain) என்ற கருத்தை மருத்துவ உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

மேலும், ஓப்பன் ஹார்ட் சர்ஜரிக்கு பின், நோயாளிகளுக்கு ஏற்பட்ட மார்பு வலி, அறுவைசிகிச்சையின் போது தசைகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி (Trauma), இறுக்கம் அல்லது நீண்ட நேரம் ஒரே நிலையில் இருந்ததால் உருவானது என்பதையும் அவதானித்தார்.1930களில் டாக்டர்.ஜேனட் ஜி. ட்ராவல், ஒரு கார்டியாலஜிஸ்டாக இருந்து, 1940-களில் மையோஃபேஷியல் ட்ரிகர் பாயின்ட்ஸை (Myofacial trigger points) முறையாக ஆய்வு செய்து, 1942-ல் இதை முதன்முதலில் வெளியிட்டார்.

1950 மற்றும் 1960-களில், டாக்டர் டேவிட் சைமன்ஸுடன் இணைந்து, ட்ரிகர் பாயின்ட்ஸின் இயல்பு மற்றும் மையோஃபேஷியல் வலி சிண்ட்ரோம் (MPS) பற்றி ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டார்.1983-ல், இவர்கள் இருவரும் இணைந்து ‘Myofascial Pain and Dysfunction: The Trigger Point Manual’ என்ற புத்தகத்தை வெளியிட்டனர். இது ட்ரிகர் பாயின்ட்ஸ் மற்றும் மையோஃபேஷியல் வலி பற்றிய நவீன மருத்துவத்தின் மைல்கல் ஆகும்.

ட்ராவலின் ஆய்வுகள், பிசியோதெரபிஸ்ட்கள் மற்றும் பிற மருத்துவர்களுக்கு ட்ரிகர் பாயின்ட் சிகிச்சையை ஒரு முக்கிய முறையாக்கியது. ட்ரிகர் பாயின்ட் சிகிச்சை முறைகள், ஓப்பன் ஹார்ட் சர்ஜரிக்கு பிந்தைய மறுவாழ்வு (Rehabilitation) செயல்முறைகளை மேம்படுத்தின.

Dr.ஜேனட் ட்ராவலின் சிகிச்சை முறை

டாக்டர். ட்ராவல், ட்ரிகர் பாயின்ட்ஸை அடையாளம் கண்டு, அந்த குறிப்பிட்ட இடத்தில் புரோகைன் ஊசி (Procaine Injection) செலுத்தினார். இது ட்ரிகர் பாயின்ட்டில் உள்ள ஹைப்பர்இரிடபிள் (Hyperirritable) பகுதியை அமைதிப்படுத்தி, உள்ளூர பரவல் வலியை (Referred Pain) குறைத்தது.இந்த முறை, அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய வலி, குறிப்பாக ஓப்பன் ஹார்ட் சர்ஜரிக்கு பின் ஏற்படும் மார்பு மற்றும் தோள்பட்டை தசை வலிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இது ட்ரிகர் பாயின்ட்டில் உள்ள தசை இறுக்கத்தை உடனடியாக தளர்த்தியது. இதனால் தசை மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப உதவியது. இது நோயாளிகளுக்கு வலி நிவாரணம் அளிப்பதோடு மட்டுமல்லாது தசையின் இயக்கத்தையும் மேம்படுத்தியது.

புரோகைன் ஊசிக்கு பிறகு, ட்ராவல் பெரும்பாலும் ஸ்ப்ரே மற்றும் ஸ்ட்ரெட்ச் (Spray and Stretch) முறையைப் பயன்படுத்தினார். இதில், குளிர்ந்த ஸ்ப்ரேயை (Ethyl Chloride) பயன்படுத்தி தசையை தளர்த்தி, பின்னர் தசையை ஸ்ட்ரெட்சிங் (stretching) செய்தார்.இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை, ட்ரிகர் பாயின்ட்ஸின் விளைவுகளை நீண்ட காலத்துக்குக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

பிசியோதெரபியில் ட்ரிகர் பாயின்ட்ஸ்

ட்ரிகர் பாயின்ட்ஸ் (Trigger Points) என்பவை தசை நாண்களில் உருவாகும் முடிச்சுகளாகும். இவை வலி, இறுக்கம் மற்றும் இயக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், இவை தசை நாண்களில் உள்ள உணர்திறன் மிக்க பகுதிகளாகவும், தசை இழைகளில் இறுக்கமான பட்டைகளாகவும் (Taut Bands) உருவாகின்றன.

இவை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:

*ஆக்டிவ் ட்ரிகர் பாயின்ட்ஸ் (Active Trigger Points): இவை தொடர்ந்து வலியை உருவாக்கி, குறிப்பிட்ட இடத்தில் தொடும்போது உணரப்படுகின்றன.

*லேடன்ட் ட்ரிகர் பாயின்ட்ஸ் (Latent Trigger Points): இவை வலியை உருவாக்காவிட்டாலும், தசை இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் அல்லது பலவீனத்தை ஏற்படுத்தும்.

இந்த ட்ரிகர் பாயின்ட்ஸுகள் தசையின் நரம்பு-தசை இணைப்பு (Neuromuscular Junction) பகுதியில் உருவாகின்றன. இவை இரத்த ஓட்டக் குறைபாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் வளர்சிதை மாற்றக் கழிவுகளின் தேக்கத்தால் பாதிக்கப்படுகின்றன. இதனால் தசைகளில் வலி மற்றும் இறுக்கம் உண்டாகிறது.

காரணங்கள்:

ட்ரிகர் பாயின்ட்ஸ் உருவாக பல காரணங்கள் உள்ளன

*அதிகப்படியான தசை பயன்பாடு: மீண்டும் மீண்டும் ஒரே இயக்கத்தைச் செய்வது (எ.கா., டைப்பிங், பளு தூக்குதல்). கம்யூட்டரில் அதிக நேரம் வேலை செய்யும் பலருக்கு கழுத்து மற்றும் தோள்பட்டை தசையான Trapezius ல் உண்டாகும் ட்ரிக்கர் பாயின்ட்டினால் கழுத்து வலி மற்றும் தலைவலியை ஏற்படும்.

*காயங்கள்: தசைப்பிடிப்பு, விபத்து அல்லது தவறான தோரணை (Poor posture).

*மன அழுத்தம்: மன அழுத்தம்கூட தசைகளை இறுக்கமாக்கி ட்ரிகர் பாயின்ட்ஸைத் தூண்டலாம்.

*ஊட்டச்சத்து குறைபாடு: வைட்டமின் D, மெக்னீசியம் அல்லது நீர்ச்சத்து குறைவினாலும் ட்ரிக்கர் பாயின்ட்ஸ் உருவாகும்.

*மோசமான தோரணை: நீண்ட நேரம் ஒரே நிலையில் உட்கார்ந்திருப்பது அல்லது தவறான உடல் அமைப்பு.

சிகிச்சை முறைகள்

*மேனுவல் அழுத்த சிகிச்சை (Manual Pressure Release): ட்ரிகர் பாயின்ட்டில் மெதுவாக அழுத்தம் கொடுத்து தசையைத் தளர்த்துவது.

*ஊசி சிகிச்சை (Dry Needling): மெல்லிய ஊசிகளைப் பயன்படுத்தி ட்ரிகர் பாயின்ட்ஸைத் தூண்டி வலியைக் குறைப்பது. சிலர் இது அக்குபங்சர் என நினைத்துக்கொள்வார்கள். அக்குபங்சர் சிகிச்சை முறைக்கும் இந்த சிகிச்சை முறைக்கும் வேறுபாடு உள்ளது. இந்த சிகிச்சை முறையில் ஊசியானது நேரடியாக வலியை ஏற்படுத்தும் தசை முடிச்சுகளின் மீது செலுத்தப்பட்டு தசையை தளர்த்தப்பட்டு வலி குறைக்கப்படுகிறது. ஆனால், அக்குபங்சரில் குறிப்பிட்ட புள்ளிகளில் மட்டுமே ஊசி செலுத்தப்படும்.

*மசாஜ் சிகிச்சை: ஆழமான திசு மசாஜ் (Deep Tissue Massage) மூலம் தசை இறுக்கம் குறைக்கப்படும்.

*நீட்சி மற்றும் உடற்பயிற்சி: தசைகளை வலுப்படுத்தவும், இறுக்கத்தைக் குறைக்கவும் நீட்சி உடற்பயிற்சிகள் (Stretching Exercises) பரிந்துரைக்கப்படுகின்றன.

*வெப்ப/குளிர் சிகிச்சை (Hot and Cold): வெப்பம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், குளிர் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

*அல்ட்ராசவுண்ட் மற்றும் TENS: அல்ட்ராசவுண்ட் அல்லது டிரான்ஸ்குட்டேனியஸ் எலக்ட்ரிக்கல் நரம்பு தூண்டல் (TENS) மூலம் வலி நிவாரணம் அளிக்கப்படுகிறது.

பயன்கள்:

1. வலி நிவாரணம்: தசை வலி, தலைவலி, முதுகுவலி மற்றும் கழுத்து வலி ஆகியவற்றைக் குறைக்கிறது.
2. இயக்க மேம்பாடு: இறுக்கமான தசைகளைத் தளர்த்தி இயக்க வரம்பை (Range of Motion) அதிகரிக்கிறது.
3. நீண்டகால நிவாரணம்: முறையான சிகிச்சையால் லேடன்ட் (மறைந்த) ட்ரிகர் பாயின்ட்ஸைத் தடுக்கலாம்.
4. மன அழுத்தக் குறைப்பு: தசை இறுக்கத்தைக் குறைப்பதன் மூலம் உடல் மற்றும் மன அழுத்தம் குறைகிறது.

Manual pressure therapy மற்றும் Dry needling சிகிச்சையை பயிற்சி பெற்ற பிசியோதெரபிஸ்ட்டுகள் மற்றும் மருத்துவர்கள் மூலம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். தவறான அழுத்தம் அல்லது ஊசி சிகிச்சையானது வலியை மேலும் அதிகரிக்கச் செய்யும்.முறையான உடற்பயிற்சி மற்றும் பிசியோதெரபி மூலம் வலியற்ற வாழ்வை வாழ்வோம்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi