Wednesday, February 21, 2024
Home » திருச்சி விமான நிலையத்தில் ரூ1,200 கோடியில் புதிய முனையம்: பிரதமர் மோடி ஜன. 2ல் திறப்பு

திருச்சி விமான நிலையத்தில் ரூ1,200 கோடியில் புதிய முனையம்: பிரதமர் மோடி ஜன. 2ல் திறப்பு

by Neethimaan


திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,200 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையத்தை பிரதமர் மோடி வரும் 2ம் தேதி திறந்து வைக்கிறார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்கிறார். திருச்சி சர்வதேச விமான நிலையத்தை தரம் உயர்த்தி புதிய விமான நிலைய முனையம் கட்ட இந்திய விமான நிலைய ஆணைய குழுமம் ரூ.951 கோடி ஒதுக்கீடு செய்தது. இதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு முதல் கட்டுமான பணிகள் தொடங்கியது. இந்நிலையில் கூடுதலாக ரூ.249 கோடி செலவு செய்து கட்டுமான பணிகள் ரூ.1200 கோடியில் நிறைவு பெற்றுள்ளது. இந்த புதிய முனையம் 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 4000 சர்வதேச பயணிகள், 1500 உள்நாட்டு பயணிகளை கையாள முடியும்.

இந்திய கலாசாரம், பாரம்பரியத்தை உணர்த்தும் கலை நயத்துடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய முனையம் திறப்பு விழா வரும் ஜன. 2ம் தேதி(செவ்வாய்) நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு புதிய முனையத்தை திறந்து வைப்பதுடன், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர். பிரதமர் மோடி விழாவில் கலந்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் அலுவலகம் நேற்றிரவு வெளியிட்டது. மேலும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக 2.81 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கான பட்டமளிப்பு விழாவும் அன்றைய தினம் நடைபெறுகிறது.

இந்த விழாவிலும் பிரதமர் மோடி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு 2ம் தேதி காலை 10 மணிக்கு தனி விமானத்தில் பிரதமர் மோடி வருகிறார். புதிய முனையத்தில் வந்திறங்கும் பிரதமர் மோடி விவிஐபிக்கள் செல்லும் வழியாக சென்று அங்கிருந்து காரில் புறப்பட்டு பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு காலை 10.30 மணிக்கு செல்கிறார். அங்கு பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் 15 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி பேசுகிறார். பின்னர் அங்கிருந்து 11.45 மணிக்கு புறப்பட்டு 12 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வருகிறார். இதைத்தொடர்ந்து அங்கு நடைபெறும் விழாவில் ரூ.1200 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

அப்போது புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை அவர் துவக்கி வைக்கிறார். விழா முடிந்ததும் மதியம் 1.05 மணிக்கு தனி விமானம் மூலம் லட்சத்தீவுக்கு புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி மாவட்ட நிர்வாகம், காவல் துறை சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலைய புதிய முனையத்தில் 100 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையம் அருகே உள்ள வீடுகள், பணியாற்றுபவர்களின் ஒட்டு மொத்த விவரங்களையும் காவல்துறை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். விமான நிலையம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய டெல்லியில் இருந்து எஸ்பிஜி பாதுகாப்பு குழுவினர் இன்று மாலை அல்லது நாளை திருச்சி வர வாய்ப்பு இருப்பதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

You may also like

Leave a Comment

7 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi