துறையூர்: திருச்சி பச்சமலை அரசு பள்ளியில் பயின்று சட்ட நுழைவு தேர்வில் (கிளாட் தேர்வு) மாநிலத்தில் முதலிடத்தில் தேர்ச்சியடைந்த பழங்குடியின மாணவர் தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சேர்க்கை கிடைத்துள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் பச்சமலை வண்ணாடு ஊராட்சி தோனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரின் மகன் பரத் (17). பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். இவரது தாய் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது தந்தை கொத்தனார் வேலை செய்கிறார். இந்த மாணவர் பச்சமலையில் தனது ஊராட்சிக்குட்பட்ட சின்னஇலுப்பூரிலுள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயின்றார். காமர்ஸ் குரூப்பில் பயின்ற பரத் கடந்த கல்வியாண்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி 600க்கு 356 மார்க் பெற்று தேர்ச்சியடைந்தார்.
இவர் பள்ளிக் கல்வியை தமிழ் வழியில் பயின்ற போதிலும் ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் நாடு முழுவதும் உள்ள தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் இளங்கலை சட்டம் (ஹானர்ஸ்) படிக்க ஒன்றிய அரசு சார்பில் இளங்கலை சட்டப் படிப்பு சேர்க்கைக்காக நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வை (சிஎல்ஏடி- கிளாட்) எழுதினார். அண்மையில் இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கிளாட் தேர்வில் ஆல் இந்தியா அளவில் எஸ்டி பிரிவில் 968வது ரேங்க் பெற்றிருந்தார். தமிழக அளவில் உள்ள 28 அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளிகளில் பயின்று கிளாட் தேர்வு எழுதிய மாணவர்களில் முதல் இடம் பெற்றிருந்தார்.
அவர் பெற்ற ரேங்க் அடிப்படையிலும், தமிழக அரசு பள்ளிகளில் பயின்றவருக்கு வழங்கப்படும் 7.5 சத ஒதுக்கீட்டில் திருச்சி மாவட்டம் ரங்கத்திலுள்ள தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் பி.காம். எல்எல்பி (ஹானர்ஸ்) படிப்புக்கு சேர்க்கை பெற்றுள்ளார். துறையூர் பகுதி பச்சமலை பழங்குடியினர் பள்ளியில் பயின்று தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் சேர்க்கைப் பெற்ற முதல் மாணவர் பரத் என்பதையறிந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பெரம்பலூர் தொகுதி எம்பி அருண்நேரு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
* பழங்குடியின மக்களுக்கு உரிமைகளை பெற்று தருவேன்..
மாணவர் பரத் கூறுகையில், ‘சட்டம் படிக்க வைக்க வேண்டும் என்ற என் தந்தையின் ஆசையை நிறைவேற்றவே படித்தேன், மேலும் சட்ட படிப்பை படிக்க எனது பள்ளி ஆசிரியர்களும் ஊக்குவித்தனர். அவர்களின் ஊக்குவிப்பே என் வெற்றிக்கு காரணம். மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் போன்று பல்வேறு துறைகள் இருந்தாலும் சட்டம் படிக்க வேண்டும் என்பதே என் கனவு. எங்கள் மலையில் தற்போது வரை யாரும் சட்டம் படிக்கவில்லை நானே முதல் மாணவன். சட்டத்துறை வாயிலாக நிச்சயம் எங்கள் மக்களுக்கு தேவையான சட்டரீதியான உதவிகளையும் செய்வேன். உரிமைகளையும் பெற்று தருவேன்’ என்றார்
* முதல்வர் பாராட்டு
மாணவனின் வெற்றியை பாராட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘உள்ளம் உவகையில் நிறைகிறது, தம்பி பரத் சட்டம் பயின்று தன் அறிவொளியை இந்தச் சமூகத்திற்கு வழங்கிட என் வாழ்த்துகள். பரத்தின் சட்ட படிப்புக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்க திமுக சட்டத்துறையும் அதன் செயலாளர் இளங்கோவும் துணைநிற்பார்கள்’ என்று தெரிவித்துள்ளாா்.