கோவை: திருச்சி நவகுடி பகுதியை சேர்ந்தவர்கள் திருமுருகன், துர்காதேவி தம்பதி. கர்ப்பிணியான துர்காதேவி ஒரு வாரத்துக்கு முன்பு பிரசவத்திற்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு துர்காதேவிக்கு கடந்த 27ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் குழந்தையை பரிசோதனை செய்தபோது, இதய குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கிருந்து கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று மதியம் 1 மணிக்கு திருச்சியில் இருந்து குழந்தையுடன் ஆம்புலன்ஸ் கோவை புறப்பட்டது. போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காத வகையில் போலீசார், கிரீன் காரிடர் அலர்ட் ஏற்படுத்தி போக்குவரத்தை சரி செய்து கொடுத்தனர். இதனால் இரண்டரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் கோவைக்கு வந்தடைந்தது.
திருச்சியில் இருந்து கோவைக்கு பயண தூரம் சுமார் 220 கிலோ மீட்டர். குறைந்த பட்சம் 4 மணி நேரம் ஆகும். ஆனால் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் போலீசார் வழிவகை செய்து கொடுத்ததால் இரண்டரை மணி நேரத்திலேயே குழந்தையுடன் ஆம்புலன்ஸ் கோவைக்கு வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்து, அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.