திருச்சி: திருச்சியில் கார் மோதிய விபத்தில் 2 இளைஞர்களின் உயிரை காப்பாற்றிவிட்டு போக்குவரத்து காவலர் உயிரிழந்த நிலையில் தங்கள் குடும்பத்திற்கு உதவுமாறு முதலமைச்சருக்கு காவலரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார். திருச்சி போக்குவரத்துக்கு பிரிவில் பணியாற்றிய தலைமை காவலர் ஸ்ரீதர் கடந்த மாதம் 30ம் தேதி மன்னார்புரம் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது பைக்கில் தலைக்கவசம் அணியாமல் வந்த இரண்டு இளைஞர்களின் கையில் இருந்த ஹெல்மேட் கேழே விழுந்துள்ளது. அதனை எடுத்து கொடுத்து அறிவுரை வழங்கி கொண்டிருந்த போது ஸ்ரீதர் இருந்த திசையை நோக்கி கார் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. உடனடியாக இரண்டு இளைஞர்களையும் காவலர் பிடித்து தள்ளிவிட்டார். கார் நேராக மோதியதில் ஸ்ரீதர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இரண்டு பேரின் உயிரை காப்பாற்றி காவலர் ஸ்ரீதர் உயிரைவிட்ட நிலையில் தங்கள் குடும்பத்தினருக்கு இதுவரை அரசின் எந்த உதவியும் கிடைக்கவில்லை என அவரது மனைவி சுமித்ரா தேவி வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினியை நேரில் சந்தித்து சுமித்ரா தேவி கோரிக்கை மனு அளித்துள்ளார். அதனை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காமினியும் உறுதியளித்துள்ளார்.