திருச்சி: திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே பணிமனையில் பழைய ரயில் இன்ஜின்கள் புதுப்பிக்கப்படுகிறது. குறிப்பாக மீட்டர் கேஜ் பாதையில் பயன்படுத்தப்பட்ட இன்ஜின்கள், அகல ரயில் பாதைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படுகிறது. அதேபோல் மீட்டர் கேஜ் பாதையில் பயன்படுத்தப்படும் ஊட்டி மலை ரயில் இன்ஜின் அவ்வப்போது பராமரிப்பு பணிக்காக பொன்மலை கொண்டு வரப்படும்.
இந்நிலையில் முதன்முறையாக மீட்டர் கேஜ் பாதையை விட, சிறிய அளவிலான தண்டவாளத்தில் பயன்படுத்தப்படும் இன்ஜின் ஒன்று சீரமைப்புக்காக பொன்மலை பணிமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுபற்றி பொன்மலை பணிமனை ஊழியர்கள் கூறியதாவது: இந்த இன்ஜின் மும்பையில் உள்ள நேரல்மாத்ரன் என்ற பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் பயணிகள் பயணிப்பதற்கான ரயில் பெட்டிகளை இழுத்து செல்வதற்கு ஏ, பி, ஏபி என்று பல ரகங்களில் இன்ஜின்கள் உற்பத்தி செய்யப்பட்டது. அதில் இந்த இன்ஜின் “பி” ரகத்தை சேர்ந்தது. இதன் எடை மொத்தம் 11.43 டன். பணியின் போது அதிகபடியாக பயன்படுத்த கூடிய எடை 15.50 டன். மொத்தம் 5878 மிமீ நீளம், 2559மிமீ உயரம், 1753மிமீ அகலம் உள்ளது. சக்கரங்கள் 660மிமீ சுற்றளவு உள்ளது. 335 குதிரை திறன் கொண்டது.
பழமையான இன்ஜின் என்பதால் இதற்கான உதிரிபாகங்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. ஆனாலும் நாங்கள் அதை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றி வடிவமைத்துள்ளோம். இந்த இன்ஜினை தற்போது “ஆயில் பயர் சிஸ்டம்” மூலம் இயங்கும்படி வடிவமைத்துள்ளோம். பொதுவாக இந்த இன்ஜின் இயக்க தொடங்கும்போது டீசல் பயன்படுத்திக்கொள்ளலாம். அதன்பின் பொருளாதார ரீதியாக பெரிய அளவில் இழப்பு ஏற்படாமல் இருக்க குருடாயில் பயன்படுத்தி இன்ஜினை இயக்குவோம். திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை முதல் முறையாக மீட்டர் கேஜ் பாதையை விட குறைந்த அளவிலான தண்டவாளத்தில் செல்லும் இன்ஜினை சீரமைத்துள்ளது என்றனர்.