திருச்சி: திருச்சி என்.ஐ.டி. விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தை விசாரிக்க உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி என்.ஐ.டி. விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவருக்கு ஒப்பந்த ஊழியரான கதிரேசன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து விடுதி வார்டனிடம் அந்த மாணவி புகார் கூறிய போது அவரை தரக்குறைவாக வார்டன் பேசியதாக தெரிகிறது. இதனால் வார்டன் மீதும் ஒப்பந்த ஊழியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
இதனிடையே விடுதி அறையில் தனியாக இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒப்பந்த ஊழியர் கதிரேசன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், திருச்சி என்.ஐ.டி. விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தை விசாரிக்க உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெண் வழக்கறிஞர்கள், மாணவ பிரதிநிதிகள் என 10 பேர் கொண்ட குழுவாக இந்த உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. என்.ஐ.டி. விவகாரம் குறித்து இன்று முதல் இந்த குழு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.