திருச்சி: காய்ச்சல் காரணமாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாக மாதர் சம்மேளன மாநாடு நடந்தது. இதில் பங்கேற்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சி வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. வாந்தியும் எடுத்தார்.
இதையடுத்து அவர் மிளகுபாறையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் காய்ச்சல் குறையாததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முத்தரசனை பரிசோதனை செய்த டாக்டர்கள், 2 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரவு 9 மணிக்கு மேல் முத்தரசனுக்கு காய்ச்சல் குறைந்ததாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இரவு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்போனில் முத்தரசனை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். அதேபோல் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை மருத்துவமனைக்கு சென்று முத்தரசனை பார்த்து நலம் விசாரித்தார்.