துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் கீரம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோம்பை புதூர் கிராமத்தில் சுமார் 300 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு செல்லும் சாலையின் நடுவே கீரம்பூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் மாவலிங்கம் ஓடை உள்ளது .மழைக்காலங்களில் தண்ணீர் செல்லும் பாதையில் நடுவே தற்போது தரை பாலம் உள்ளது.
மழைக்காலங்களில் இப்பகுதியில் மக்கள் செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையில் பச்ச மலை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் மாவலிங்க ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கீரம்பூர் ஏரிக்கு சென்று ஏரி நிரம்பி வழிந்து வருகிறது. தற்பொழுது ஓடையில் அதிக அளவில் தண்ணீர் செல்வதால் இந்தச் சாலை வழியாக செல்ல முடியாமல் விவசாயிகள், மக்கள் தவித்து வருகின்றனர்.
இப்பகுதி விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஓடையை கடந்து செல்ல முடியாமல் செங்காட்டுப்பட்டி வழியாக 3 கிலோமீட்டர் தூரத்திற்கு சுற்றி வருகின்றனர். இதனால் விவசாயிகள், பெரியவர்கள், பள்ளி மாணவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பகுதி மக்கள் உயர் மட்ட பாலம் அமைத்து தர பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, உயர் மட்ட பாலம் கட்டுவதற்கு ஆய்வு செய்து சென்ற அதிகாரிகள் திரும்ப வரவில்லை என கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் மட்ட பாலம் கட்டித் தர வேண்டுமென கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.