திருச்சி: திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தாக்கல் செய்த வழக்கில் சீமானுக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி சரக டிஐஜியாக இருப்பவர் வருண்குமார். அவர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்தார். அந்த கைதுக்கு பிறகு வருண் குமார் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் சமூக வலைத்தளங்களில் அவதூறாக கருத்து பதிவிட்டு வந்தனர்.
அதே போல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் வருண்குமார் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் செய்தியாளர்கள் சந்திப்பில் அவதூறாக பேசியதாக கூறி திருச்சி சரக டிஐஜி வருண்குமார் கடந்த டிசம்பர் மாதம் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார். சீமான் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். அந்த அவதூறு வழக்கு விசாரணை குற்றவியல் நீதிமன்றம் எண்.4 நீதிபதி விஜயா முன்பு நடைபெற்றது.
இதில் இரு தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டது. வருண்குமார் தரப்பில் உயர் பதவியில் இருக்கக்கூடிய ஒரு நபரை அவரது கடமை செய்ததற்காக அதற்கு எதிராகவும் அவரது குடும்பத்தினர் குறித்தும் அவதூறான கருத்துக்களை பேசினார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருண்குமார் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் 21 ஆம் தேதி நடந்த போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த வழக்கு இந்த நீதிமன்றத்தில் நடத்துவதற்கு உகந்த வழக்கு அல்ல என சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
எழும்பூர் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் பேசியது. வழக்கு தொடர்ந்தால் அங்கேயே தொடர வேண்டும். திருச்சியில் தொடருவதற்கு எந்த முகாந்தரமும் இல்லை. எனவே இந்த வழக்கை இன்று விசாரிக்க கூடாது என சீமான் தரப்பு வாதங்களை முன் வைத்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஜூன் -4 இன்று ஒத்திவைத்தார். இதில் ஒரே வழக்கை விசாரிக்கலாமா அல்லது முன்கூட்டியே தள்ளுபடி செய்யலாமா என நீதிமன்றம் விதி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ளலாமா அல்லது தள்ளுபடி செய்யலாமா என்பது குறித்தான முடிவை இன்று நீதிபதி அறிவிப்பதாக இருந்தது. இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டு மீண்டும் மதியம் ஒத்திவைக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயா இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது தான். தொடர்ந்து இந்த வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பாக சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என கூறி சம்மன் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜூலை 7க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.