திருச்சி: திருச்சியில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 8 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போலீஸ் பரிந்துரை செய்துள்ளது. பைக் சாகசம் செய்த வழக்கில் சக்திவேல், விஜய், அஜய், அஜித்குமார் உட்பட 8பேர் கைது செய்யப்பட்டனர். பட்டாசுகளை இருசக்கர வாகனத்தில் வைத்து வெடித்தபடி வீலிங் செய்து சிக்கிய பலரும் டிடிஎப் வாசனின் ரசிகர்கள் என்பது விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கடையநல்லூர் அருகே வடகரையில் பைக்கில் பட்டாசுடன் வீலிங் செய்து சிக்கிய 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வீலிங் செய்த 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் 3 பேரை தென்காசி மாவட்ட போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். 18 வயதுக்கு குறைவானவர்கள் என எச்சரித்து விடப்பட்டவர்கள் டிடிஎப் வாசனின் ரசிகர்கள் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் வீலிங் செய்தபடி விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசன் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார். டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில் அவரை போலவே இளைஞர்கள் பலரும் வீலிங் செய்து அடுத்தடுத்து சிக்கும் சம்பவங்கள் திகழ்ந்து வருகின்றது.
தீபாவளி பண்டிகை நேற்று நவம்பர் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துகளை பரிமாறியும் தீபாவளியை கொண்டாடினர். தீபாவளி பண்டிகை காலத்தில் சந்தோஷங்கள் ஒரு பக்கம் இருக்க இன்றைய இளைஞர்கள் சாகசம் என்ற பெயரில் உயிரை பணயம் வைத்து பைக் சாகசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சக வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சி புறநகர் பகுதியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீலிங் சாகசம் செய்யும் இளைஞர்கள் ஆபத்தான முறையில் பட்டாசுகளை இருசக்கர வாகனத்தில் முன் பக்கம் வைத்து வெடித்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி ஒரு இளைஞர் வானத்தில் சென்று வெடிக்கக் கூடிய வெடியை இரு சக்கர வாகனத்தின் முன் கட்டி அதனை பற்ற வைத்து இரண்டு சக்கர வாகனத்தில் வீலிங் செய்து இந்த வான வேடிக்கைகள் வெடித்து சிதறக்கூடிய காட்சிகளை அவர்களே படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். மேலும் இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் உட்கார்ந்து கொண்டு சரவெடியை கொளுத்தி அதனை சுழற்றி சுழற்றி வெடிக்க கூடிய காட்சியும் பதிவிட்டுள்ளனர்.