திருச்சி: மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியிடம் 2,291 கிராம் தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது பெண் பயணியிடம் இருந்து தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1 கோடியே 53 லட்சம் ஆகும்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், எவ்வித ஆவணமும் இன்றி சுங்க வரி செலுத்தாமல் தங்கத்தை கடத்தியது தெரியவந்தது. அவரது பாஸ்போர்ட்டை சரிபார்த்ததில் அவர் தங்கத்தை இறக்குமதி செய்ய தகுதியான பயணி இல்லை என்பதும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அந்த பெண் பயணி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.