காரமடை: கோவை அருகே முயல் வேட்டைக்கு சென்ற பழங்குடியின வாலிபர் சரமாரியாக சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கியுடன் தப்பி ஓடிய 2 கூட்டாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ளது அத்திக்கடவு. இங்குள்ள சொரண்டி பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் ராஜன் (48). அரசு பஸ் டிரைவர். இவரது மகன் சஞ்ஜித் (23). நேற்று முன்தினம் இரவு இவர் குண்டூரை சேர்ந்த முருகேசன் (37), அன்சூரை சேர்ந்த பாப்பையன் (50) ஆகியோருடன் அத்திக்கடவு வனப்பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றார். அப்போது 3 பேரும் மது குடித்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து முருகேசன், பாப்பையன் ஆகிய இருவரும் சேர்ந்து சஞ்ஜித்தை நாட்டு துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் இடது மார்பின் கீழே 4 குண்டுகள் துளைத்து படுகாயம் அடைந்த சஞ்ஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முருகேசனும், பாப்பையனும் துப்பாக்கியுடன் தப்பி ஓடிவிட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த உறவினர்கள் சஞ்ஜித்தின் உடலை மீட்டு தங்கள் கிராமத்திற்கு எடுத்துச்சென்றனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் நேற்று காலை மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அதியமான், காரமடை இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காரமடை போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகிறார்கள். சுட்டுக்கொல்லப்பட்ட சஞ்ஜித் மற்றும் முருகேசன், பாப்பையன் ஆகிய 3 பேரும் முயல் வேட்டைக்குத்தான் சென்றனரா? அல்லது சந்தன மரம் வெட்டி கடத்த முயன்றனரா? துப்பாக்கி எப்படி கிடைத்தது? என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது.