சென்னை: பழங்குடியினரின் வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பதிவு பெற்ற சங்கங்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து பழங்குடியின நல இயக்குநர் அண்ணாதுரை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 7,94,697 பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு நிலையான வருமான வாய்ப்பினை ஏற்படுத்தி தருவதிலும் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
இதன் முன்னெடுப்பாக, 2023-24ம் ஆண்டின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரது அறிவிப்பில், பழங்குடியினருக்கான வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும், வருவாய் ஈட்டும் திட்டங்கள் நிலைத்து பலன் தர வேண்டியும், தமிழகத்தில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பதிவு பெற்ற சங்கங்களுடன் இணைந்து தேனீ வளர்ப்பு, மருத்துவ மூலிகை வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, இயற்கை மிளகு விளைவித்தல், கோட்டா பானை தயாரித்தல். காளான் வளர்ப்பு, மூங்கில் தளவாடங்கள் தயாரித்தல், துரித உணவகங்கள் அமைத்தல் மற்றும் நரிக்குறவர்களுக்கான பிரத்யேகமான கட்டமைப்புகள் போன்ற வருவாய் ஈட்டும் திட்டங்கள் ரூ.10 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பதிவுபெற்ற சங்கங்களுடன் ஒருங்கிணைந்து பழங்குடியினருக்கான வாழ்வாதார திட்டங்களை செயல்படுத்திட திட்டமிட்டுள்ளது. எனவே, பழங்குடியினர் நலத்துறை, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பதிவுபெற்ற சங்கங்களை பழங்குடியினர் நலத்துறையின் வாழ்வாதார திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களாக பட்டியலிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், பதிவு பெற்ற சங்கங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நிறுவனங்கள் விண்ணப்பம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பழங்குடியினர் துறையின் https://www.tntribalwelfare.tn.gov.in. என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 95667 46877 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். வரும் 29ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.