Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Leader
search-icon-img
Advertisement

அடிப்படை வசதிகள் கேட்டு நடைபயண போராட்டத்துக்கு திரண்ட பழங்குடியின மக்கள்

கூடலூர் : தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்கத்தின் சார்பாக பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுமார் 100க்கும் மேற்பட்டோர் நேற்று நடைபயண போராட்டத்துக்கு திரண்டனர்.

சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகி விபி குணசேகரன் துவக்கி வைத்தார். இந்திய கம்யூ., ஒன்றிய செயலாளர் முகம்மது கனி, கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூடலூரை அடுத்த ஸ்ரீ மதுரை ஊராட்சிக்குட்பட்ட முதுகுளி, குனில்வயல், நரி மூலா, வடவயல் பகுதிகளில் ஏராளமான பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வீடு, மின்சாரம். சாலை, குடிநீர்வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் பழங்குடியின மக்களை இடமாற்றம் செய்ததில் நடந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது விரைவான நடவடிக்கை மேற்கொண்டு வழக்கு விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்.

பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் தொகுப்பு வீடுகள் கட்ட ஒதுக்கிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மண் வயல் பகுதியில் இந்த போராட்டம் நடந்தது.

கூடலூருக்கு நடைபயணம் மேற்கொண்டு கோட்டாட்சியிடம் மனு அளிக்க முடிவு செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடலூர் கோட்டாட்சியர் குணசேகரன், தாசில்தார் முத்து மாரி, டிஎஸ்பி வசந்தகுமார் ஆகியோர் பழங்குடியின மக்கள் மற்றும் சங்க பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கோரிக்கை குறித்து வரும் திங்கட்கிழமை கோட்டாட்சியர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபயணம் கைவிடப்பட்டது. நிகழ்ச்சியில் ராஜா, ராஜி, கமலாட்சி, பிந்து, சுரேஷ், தேவதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர்.