புதுடெல்லி: மோடி அரசு நாட்டை தவறாக வழிநடத்துவதாகவும், போர் நடவடிக்கை குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டுமெனவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தி உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா போர் விமானங்களை இழந்ததை ஒன்றிய அரசு முதல் முறையாக ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
சிங்கப்பூரில் முப்படைகளின் தலைமைத் தளபதி அளித்த பேட்டியை பார்க்கும்போது, முக்கியமான சில கேள்விகளை கேட்க வேண்டியுள்ளது. அந்த கேள்விகளை, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை உடனடியாக கூட்டினால் கேட்கலாம். மோடி அரசு நாட்டை தவறாக நடத்தியுள்ளது. போரின் மூடுபனி தற்போது விலகுகிறது. நமது விமானப்படை வீரர்கள் எதிரிகளுடன் போரிட தங்களது உயிரையே பணயம் வைத்துள்ளனர். நமது தரப்பிலும் சில இழப்புகள் ஏற்பட்டுள்ளன, ஆனால் விமானிகள் பத்திரமாக உள்ளனர். அவர்களின் உறுதியான தைரியம் மற்றும் வீரத்திற்கு வணக்கம் செலுத்துகிறோம்.
அதே நேரத்தில், விரிவான மறு ஆய்வு இந்த நேரத்தின் தேவை. கார்கில் போருக்கு பின் மேற்கொண்டதைப் போல, சுதந்திரமான நிபுணர் குழுவினால், போர் நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதோடு, அமெரிக்க அதிபர் டிரம்ப், மத்தியஸ்தம் செய்து போர் நிறுத்தத்தை கொண்டு வந்ததாக மீண்டும் மீண்டும் தெரிவிக்கிறார். இது சிம்லா ஒப்பந்தத்திற்கு நேர் எதிரானது. அதுததவிர, அமெரிக்க வர்த்தக அமைச்சர், சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் வரியை வைத்து மிரட்டி இந்தியா, பாகிஸ்தானை பணிய வைத்ததாக கூறி உள்ளார்.
இது குறித்தெல்லாம் விளக்கம் அளிக்காமல், பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தை போல எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்து தேர்தல் வேலையில் ஈடுபடுவதோடு, இந்திய ராணுவத்தின் வீரத்தை தன்னுடையதாக்கிக் கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதா? போர் நிறுத்த ஒப்பந்தத்தின் நிலை என்ன? அதற்காக எந்த நிபந்தனைகளுக்கு மோடி அரசு ஒப்புக் கொண்டுள்ளது? என்பதை பற்றி எல்லாம் அறிய 140 கோடி இந்தியர்களும் தகுதியானவர்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.