விருதுநகர்: வேலை விட்டால் வீடு… வீடு விட்டால் வேலை… என்று எந்திரமயமாகிப்போன வாழ்க்கையில் தங்களை ரெப்ரஷ் செய்து கொள்வதற்காக இயற்கை எழில் சூழ்ந்த பகுதிக்கு குடும்பத்துடன் பயணம் செல்வது வழக்கம். ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பிரபல சுற்றுலாத் தலங்களை பார்த்தாகி விட்டதால், புதுப்புது இடங்களை தேடி இன்றைய தலைமுறை பயணம் செய்கின்றனர். இதற்கு அவர்களுக்கு பேருதவியாக இருப்பது வலைத்தளம். இங்கு பகிரப்படும் கலர்புல் வீடியோக்களை பார்த்து, புதிய இடங்களுக்கு சுற்றுலா சென்று பொழுதை கழித்துவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
இந்த வரிசையில் கடந்த சில நாட்களாக கண்ணுக்கு குளிர்ச்சியான பசுமையான வீடியோக்களுடன் வைரலாகி வருகிறது ‘கூமாபட்டி’ என்ற மலையடிவாரக் கிராமம். அந்த வீடியோவில் வரும் நபர், ‘‘ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க.. உங்களுக்கு லவ் பெயிலியரா? 4 குழந்தை பெற்றும் வாழ்க்கை சந்தோஷமா இல்லையா? மன அழுத்தமா? கூமாபட்டிக்கு வாங்க.. இந்த தண்ணில குளிச்சு பாருங்க.. எந்த வியாதியும் வராது. சொர்க்க பூமி இது. பின்னாடி பாருங்க காஷ்மீர் மாதிரி இருக்கு. அங்க பாருங்க கர்நாடகா மாதிரி இருக்கு…’’ என பேசியுள்ளார்.
இந்த வீடியோ தான் தற்போது இணையதளத்தில் மீம் மெட்டீரியலாக மாறி உள்ளது. இந்த குக்கிராமம் ஒரு தனித்தீவு என்றும் அவர் பேசியிருக்கிறார். தற்போது #koomapatti என்ற ஹேஷ்டாக் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நம்மவர்கள், ‘அடடா… நம்ம ஸ்டேட்ல இப்படி ஒரு குட்டி காஷ்மீரா?’ என்று இணையத்தில் கூமாபட்டி குறித்த விபரங்களை தேடி வருகின்றனர். பசுமையான கூமாபட்டி வேறு எங்கும் இல்லை.
View this post on Instagram
கந்தக பூமியான சிவகாசி அமைந்துள்ள அதே விருதுநகர் மாவட்டத்தில்தான் அமைந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்திலேயே எந்த காலத்திலும் பச்சைப்பசேல் என காணப்படும் ஒரே ஊர் வத்திராயிருப்புதான். வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள மிகவும் அழகான கிராமம் கூமாபட்டி ஆகும். இது வத்திராயிருப்புவில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ளது. பிளவக்கல், பெரியாறு அணை இயற்கையோடு இணைந்த மிக அழகான இடம்.
கூமாபட்டிக்கு அருகில் அமைந்துள்ள இந்த அணை மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இயற்கை அழகை ரசிக்கவும், அமைதியான சூழலை உணரவும் ஏற்ற இடம். இணையத்தில் வைரலாகும் வீடியோவை பார்த்து தற்போது கூமாபட்டிக்கு வரும் சிலர் ஏமாற்றமடைகின்றனர். காரணம், தற்போது காண கிடைக்கும் வீடியோக்கள் அனைத்தும் பருவமழை பெய்து விவசாயம் நடந்த காலத்தில் எடுக்கப்பட்ட பழைய வீடியோக்கள் ஆகும். வீடியோவில் உள்ளதுபோல் முழுவதும் கண்ணுக்கு குளிர்ச்சியாக கூமாபட்டி தற்போது இல்லை.