சத்தியமங்கலம் : தாளவாடி மலைப்பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து பயிர் சேதம் மற்றும் மனித வனவிலங்கு மோதல் ஏற்படாமல் தடுக்க 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழி வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தமிழகத்திலேயே அதிக பரப்பளவை கொண்ட அடர்ந்த வனப் பகுதியாகும். இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டுமாடு, கழுதைப்புலி, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. குறிப்பாக காட்டு யானைகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் நுழைந்து விவசாய தோட்டங்களில் பயிரிட்டுள்ள வாழை, கரும்பு, மக்காச்சோளம், மற்றும் காய்கறி பயிர்களை சேதப்படுத்துகின்றன.
இது போன்ற நேரங்களில் விவசாயிகள் காட்டு யானைகளை விரட்ட முயற்சிக்கும் போது மனித வனவிலங்கு மோதல் ஏற்பட்டு மனிதர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தாளவாடி மலைப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. மலைப்பகுதியில் உள்ள கிராமங்கள் அனைத்தும் வனப்பகுதியை ஒட்டிய அமைந்துள்ளதால் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் தினமும் நடைபெற்று வருகிறது.
மேலும், கர்நாடக மாநில வனப்பகுதிகளில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்க ரயில் தண்டவாளம் அமைக்க பயன்படுத்தும் இரும்பு பார்களை பயன்படுத்தி தடுப்புகளை ஏற்படுத்தியதால், அந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் தாளவாடி வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்து விட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர். இதன் காரணமாக தற்போது தாளவாடி மலைப்பகுதியில் யானைகளால் பயிர் சேதம் ஏற்படுவது அதிகரித்துள்ளது.
மேலும், தினமும் இரவு நேரத்தில் விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு காவல் இருந்து வனவிலங்குகளிடமிருந்து விளை பயிர்களை காப்பாற்றுவது மிகப்பெரும் சவாலாக அமைந்துள்ளது. இதற்கிடையே, விவசாயிகள் வனத்துறையினரிடம் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகம் தனது சிஎஸ்ஆர் நிதியிலிருந்து தாளவாடி மலைப் பகுதியில் காட்டு யானைகள் வெளியேறாமல் தடுக்க அகழி வெட்டுவதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கியது.
இதைத்தொடர்ந்து, தற்போது தாளவாடி மலைப்பகுதியில் இந்த நிதியின் மூலம் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தி அகழி வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள திகினாரை கிராமத்தில் இருந்து மல்கொத்திபுரம் வழியாக இரிபுரம் வரை 6 கிலோ மீட்டர் தூரத்திற்கும், திகினாரை முதல் ஜீரஹள்ளி வழியாக பெலத்தூர் வரை 13 கிலோ மீட்டர் தூரத்திற்கும், மகாராஜன்புரம் வன சோதனை சாவடி முதல் கும்டாபுரம் வழியாக ராமாபுரம் வன எல்லை வரை 6 கிலோ மீட்டர் தூரத்திற்கும் என மொத்தம் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு மூன்று இடங்களில் வனத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் அகழி வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தலமலை, தொட்டபுரம், கோடிபுரம், சிக்கஹள்ளி கிராம வனப்பகுதிகளில் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலையின் சிஎஸ்ஆர் நிதியிலிருந்து ரூ.30 லட்சம் செலவில் அகழி வெட்டப்பட்டுள்ளதாகவும், வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த ஆண்டில் மட்டும் தாளவாடி மலைப்பகுதியில் சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு அகழி வெட்டப்படுவதால் யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறுவது பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.