‘‘புகார் கொடுக்க வருபவர்களிடம் ‘விட்டமின் ப’ இல்லைன்னா மனுவை கிடப்பில் போட்டு விடுகிறாராமே காக்கி அதிகாரி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மன்னர் மாவட்டத்தின் புறநகரில் உள்ள ஒரு ஸ்டேஷனில் சர்க்கரை பெயரை முன் பாதியாக கொண்ட காக்கி அதிகாரி ஒருவர் பணியாற்றி வர்றாரு.. இவர் எந்தநேரமும் போனிலே தான் பேசிக்கொண்டு இருப்பாராம்… இந்த ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைன்னு போன் வந்தால்கூட அந்த இடத்திற்கு செல்லவதே இல்லையாம்.. ஸ்டேஷனில் புகார் கொடுக்க வரும் நபர்களிடம் ‘விட்டமின் ப’ இல்லாமல் எந்த மனுவையும் விசாரிப்பதில்லையாம்.. கிடப்பில் போட்டு விடுவாராம்… ஸ்டேஷனுக்கு வரும் புகார் மனுவில் இரு தரப்பு பின்புலங்களை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் புகார்தாரர்களிடம் ‘விட்டமின் ப’ கேட்டு பெறுகிறாராம்.. பணி முடிந்து வீடு செல்லும் போது தினசரி ஒரு சரக்கு பாட்டில் இல்லாமல் செல்வதில்லையாம்.. சில நேரங்களில் பெண் காக்கிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும் சக காவலர்களே பேசிக் கொள்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சுதந்திர தினவிழா உரையில் சர்ச்சைக்குள்ளான யுனிவர்சிட்டியின் வி.சி. சாபம் விட்டதுதான் இப்ப ஹாட் டாப்பிக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சர்ச்சைக்கு பெயர் போன மாங்கனி மாவட்ட யுனிவர்சிட்டியில் நடந்த சுதந்திர தின விழா உரையில், வி.சி. சாபம் விட்டதுதான், இப்போ ஹாட் டாபிக்கா ஓடுகிறதாம்.. ஊழல், முறைகேடு புகாருக்கு ஆளான வி.சி.க்கு, சிண்டிகேட், செனட், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பும் எதிர்ப்பா இருக்குதாம்.. பலகட்ட போராட்டத்துக்கு பிறகு ஒரு வருசம் பதவி நீட்டிப்பு வாங்கிட்டு வந்தும், நிம்மதியா இருக்க முடியலியேன்னு புலம்பி தவிக்கிறாராம்.. இந்த புலம்பல் சமீபத்துல நடந்த சுதந்திர தினவிழாவுல சாபமாக மாறியிருக்காம்.. அதாவது, தேசிய கொடியேற்றி வெச்ச வி.சி., நாட்டுப்பற்று சம்பந்தமா ஏதாவது பேசுவாருனு ஆவலோட எல்லோரும் காத்திருந்திருக்காங்க.. ஆனா தன்னோட முறைகேடு தொடர்பான தகவல வெளியிட்டவங்க, யுனிவர்சிட்டியில நடக்குற நல்ல செய்திகள வெளியில சொல்ல மாட்டேங்கிறாங்கன்னு புலம்பியிருக்காரு.. திடீர்னு கோபத்தின் உச்சிக்கு போன வி.சி., எனக்கு எதிரா இருக்குற எல்லாரையும் இயற்கையே பாத்துக்கும்.. அத நானும் இருந்து நேரடியா பார்க்கத்தான் போறேன். இயற்கை மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்குன்னு தடாலடியா பேசியிருக்காரு.. இத கேட்ட வாத்தியாருங்க, சுதந்திர தின உரையில இப்படியா சாபம் விடுவாங்கன்னு பேசிக்கிட்டாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஆபீஸ் செலவு, அதிகாரிங்களுக்காகத்தான் சம்திங்கே வாங்குறோம்னு பதிவுத்துறை அலுவலத்துல ஓப்பனா சொல்லி கேட்கிறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குயின்பேட்டை மாவட்டம் வை என்று முடியுற பதிவு அலுவலகத்துல பர்த், டெத் சான்று கேட்டு போனா, கொடுத்துட்டு, சான்று வாங்கிட்டு போங்கன்னு சொல்றாங்களாம்.. அதுமட்டுமில்லாம, பத்திரத்தை பதிவு செய்ய போனா, வருவாய்த்துறையும், பேரூராட்சி கொடுத்த சான்றுகளும் உண்மை தன்மைய கண்டறியணும்னு சொல்லி, பதிவு செய்யாம நிறுத்திடுறாங்களாம்.. அப்புறம் அங்க இருக்குற ரைட்டருங்க கிட்ட சம்திங் கொடுத்தால் தான், 5 மணி நேரம் கழிச்சு பதிவே நடக்குதாம்.. இப்படி எல்லாத்துக்கும் சம்திங் கொடுத்தாத்தான் வேலை நடக்குதாம்.. சம்திங் இல்லாம அதிகாரிங்க ஆபிஸ்ல இருந்து போனதில்லையாம்.. இப்படி வாங்குறீங்களேன்னு கேட்டா? எல்லா டிஸ்ட்ரிக் பதிவு ஆபிஸ்கள் வரைக்கும் சம்திங் கொடுக்கணும்.. ஆபிஸ் செலவுக்கு பணம் கட்டணும்னு மேல் அதிகாரிங்க எங்களை கேங்குறாங்க.. நாங்க என்ன எங்க சம்பளத்துல இருந்தா கொடுக்க முடியும். ஒவ்வொருத்தருக்கும் கப்பம் கட்டணும். எங்க வேணும்னா போய் சொல்லுங்க.. அதை எப்படி பார்க்கணும்னு எங்களுக்கு தெரியும்னு, ஏகத்துக்கும் பேசுறாங்களாம்.. இப்படி பதிவு ஆபிஸ்ல நடக்குற சம்திங் வேட்டைக்கு முற்றுப்புள்ளி எப்போதுதான் வைக்கப்போறாங்களோன்னு பாதிக்கப்பட்டவங்க புலம்பி தீர்க்குறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுச்சேரி பவர்புல் அதிகாரி தீவிர கண்காணிப்பில் இறங்கியதால் நடுக்கத்தில் இருக்காங்களாமே அரசியல்வாதிகள்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு ஆளுநர்களை மாற்றம் செய்தும், புதிய ஆளுநர்களை நியமனம் செய்தும் கடந்த ஜூலை 27ம் தேதி ஜனாதிபதி அறிவிப்பு வெளியிட்டார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ஆளுநர் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த சி.பி.ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிர மாநில ஆளுநராக பொறுப்பேற்றார். குஜராத் அரசின் முதன்மை செயலாளராக பணியாற்றிய கேரளாவை சேர்ந்த பவர்புல் அதிகாரி புதுச்சேரிக்கு பதவியேற்றார். பிரதமருக்கு நெருக்கமானவர் என்பதால் ஆளும் கூட்டணி கட்சியினர் கலக்கம் அடைந்தனர். பதவி ஏற்றதும் முதல் பணியாக பிரதான ஏரிகளை பார்வையிட்டார் அவர். அப்போது ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்தாங்க.. நடவடிக்கை எடுப்பதாக கூறிய அவர், பல்வேறு துறைகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வர்றாரு… அனைத்து துறை அதிகாரிகள், ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வர வேண்டும் என்பது உள்பட பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், பிரதமரை அவர் சந்தித்ததால் என்ன நடக்குமோ என்ற நடுக்கத்தில் அரசியல்வாதிகள் இருக்காங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.