கொடைக்கானல்: கொடைக்கானல் பகுதியில் சூறைக்காற்றால் சாலையில் மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 3 தினங்களாக சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. நகரில் அரசு மருத்துவமனை பகுதியிலும், மேல்மலை பகுதியிலும் மரங்கள் சாலையில் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கொடைக்கானல், மேல்மலை கூக்கால் பகுதியில் இன்று காலை முதல் பலத்த காற்று வீசியது. இதில் கூக்கால் பிரதான சாலையில் பெரிய மரம் முறிந்து விழுந்தது.
தகவலறிந்து நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு வந்து மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் நகர் பகுதியில் வேகமாக வீசிய காற்றால் அரசு மருத்துவமனை அருகே குடியிருப்பு பகுதிக்கு அருகே இருந்த ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதில் அருகில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகள் சேதமாகின. மேலும் ஒரு வீட்டின் சுற்றுச் சுவரும் சேதமடைந்தது.
படகு அலங்கார போட்டி ரத்து
கொடைக்கானல் ஏரியில் இன்று படகு அலங்கார போட்டிகள் நடைபெற இருந்தது. அந்த போட்டிகள் ரத்து செய்யப்பட்டதாக சுற்றுலா துறையினர் தெரிவித்தனர். நேற்று நடைபெற இருந்த படகு போட்டிகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இருளில் மூழ்கிய மேல்மலை கிராமங்கள்
கொடைக்கானல் மேல்மலை பகுதியில் பூம்பாறை அடுத்த வனப்பகுதியில் மின்விநியோகப் பாதைகளிலும் மின்கம்பங்களிலும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சத மரங்கள் சாய்ந்ததில் மின் விநியோகம் தடைபட்டது. இதனால் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், கூக்கால், புது புத்தூர், பழம் புத்தூர், பூண்டி, கவுஞ்சி, போளூர், கிளாவரை, உள்ளிட்ட மலை கிராமங்கள் கடந்த 3 தினங்களாக இருளில் மூழ்கின. இந்த கிராமங்களுக்கு செல்லக்கூடிய மின் பாதைகள் மற்றும் மின்சார கம்பங்கள் வனப்பகுதிக்குள் அமைக்கப்பட்டு உள்ளது.
கடந்த 2 தினங்களாக சுமார் 20க்கும் மேற்பட்ட மின் பணியாளர்கள் மின் தடங்களை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழையும் சூறைக்காற்றும் வீசுவதால், சீரமைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் இன்று மாலைக்குள் மேல்மலை கிராம பகுதிகளுக்கு மின் விநியோகம் சீரமைக்கப்படும் என்று மின் வாரியத்தினர் தெரிவித்தனர்.