மரம் வளர்ப்பு என்பது ஒரு மாபெரும் செயல்பாடு. மரங்களின் நன்மைகள் குறித்து நாம் நீட்டி முழக்கத் தேவையில்லை. மரங்களின் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? என்பது நம் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். இதை உணர்ந்து தமிழகத்தில் சில பெரியவர்கள் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் மரம் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரம் எனும் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன் மரம் வளர்ப்பை ஒரு தவம் போல செய்து வருகிறார். இயற்கை ஆர்வலர்களால் மரச்சித்தர் என அழைக்கப்படும் அவரைச் சந்தித்து பேசினோம். ‘‘ இந்த அற்புதமான இயற்கை நமக்கு எல்லாவற்றையும் தருகிறதே, அதற்கு நாம் ஏதாவது ஒரு சின்ன கைமாறு கூட செய்ய வேண்டாமா என்ற எண்ணம் என் மனதில் அழுத்தமாக இருந்தது. அந்த எண்ணம்தான் சிறு வயதில் இருந்தே மரங்கள் வளர்ப்பதில் எனக்குள் ஒருவிதமான ஆர்வத்தை ஏற்படுத்தியது. அந்த ஆர்வம்தான் இன்று என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் லட்சக்கணக்கான மரங்களை நான் என் கையாலேயே நட்டு வளர்த்திருக்கிறேன். சமீப காலங்களில் அரசுத் துறைகளில் இருந்தும் கூட குறிப்பிட்ட எண்ணிக்கையில் மரங்கள் வேண்டும் என்று என்னிடம் கேட்பார்கள். அவர்களுடைய தேவை என்னவென்று விசாரித்து அறிந்துகொண்டு, அதற்கு ஏற்ற மாதிரியான மரக்கன்றுகளை நானே வளர்த்து, பல மாவட்டங்களுக்கும் கொண்டு போய் கொடுத்திருக்கிறேன். உண்மையிலேயே அந்தத் தருணத்தில் எனக்கு ஒருவிதமான மன நிறைவு கிடைக்கும்.
பொதுவாக நிறைய பேருக்கு மரம் வளர்ப்பது என்பது ஒரு பெரிய சவாலான விஷயமாகவும், ரொம்ப கஷ்டமான காரியமாகவும் தோன்றலாம். ஆனால் உண்மையில் அதில் அப்படி எதுவும் இல்லை. ஒரு சின்ன விதை முளைத்து அது பெரிய மரமாக வளர்வதற்கு நீண்ட காலம் பிடிக்கலாம். அதைத் தொடர்ந்து பராமரிப்பதும் கொஞ்சம் சிரமமான விஷயமாக இருக்கலாம். அதோடு இப்போது இருக்கிற காலகட்டத்தில் ஆடு, மாடு போன்ற விலங்குகள் மேய்ச்சலுக்கு வரும்போது அந்த சின்ன மரக்கன்றுகளைத் தின்று விடுகின்றன. இதனால் நிறைய பேர் நம்முடைய பாரம்பரிய நாட்டு மரங்களை வளர்ப்பதையே விட்டு விட்டு, எப்படியாவது சீக்கிரமாக ஒரு மரம் வளர்த்து விட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக கண்ட கண்ட மரங்களையெல்லாம் நட்டு வைக்கிறார்கள். இதனால் எந்த பயனும் கிடையாது.நான் ஒரு சுலபமான வழிமுறையைச் சொல்கிறேன். நான் பல வருடங்களாக பயன்படுத்தி வரும் இந்த முறையை நீங்கள் உபயோகித்தால் ஒரு சின்ன மரக்கன்று வளர்வதற்கு துளியும் தண்ணீர் தேவைப்படாது. இதைக் கேட்டவுடனே உங்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகவும், நம்ப முடியாததாகவும் இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை. அதாவது மரக்கிளையை வெட்டி எடுத்து அதன் ஒரு பகுதியை மண்ணில் புதைத்து 90 நாட்களுக்கு கண்ணும் கருத்துமாக காலையும், மாலையும் தண்ணீர் ஊற்றவேண்டும். அதன் அடிப்பகுதியில் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அந்த 90 நாட்களில் கிளையானது வேர்விட்டு, அதன் கணுக்களில் இலை துளிர்விட்டு நன்கு வளர்ந்துவிடும். இதை அப்படியே தேவைப்படும் இடத்தில் வைத்துவிட்டு ஒருமுறை தண்ணீர் ஊற்றினால் போதும்.
அதன்பிறகு அதற்கு தண்ணீர் தேவையில்லை. இதை உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், இப்போது பத்தாம் வகுப்பு படிக்கிற ஒரு மாணவனை கூப்பிட்டு, `உனக்குத் தேவையான எல்லா பணத்தையும் நீயே சம்பாதித்துக்கொள்’ என்று சொன்னால், அந்தப் பையனுக்கு அது எவ்வளவு பெரிய கஷ்டமான விஷயமாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அதே மாணவன் நன்றாகப் படித்து ஒரு டாக்டராகவோ, ஒரு பெரிய இன்ஜினியராகவோ அல்லது சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி அதில் வெற்றி பெற்று ஒரு தொழில் முனைவோராகவோ மாறிவிட்டால், அவனுக்கு பொருளாதாரப் பிரச்சினை என்பதே ஒரு பெரிய விஷயமாகத் தோன்றாது. அவன் தன்னுடைய தேவைகளை தானே பூர்த்தி செய்து கொள்வான்.அதுபோலத்தான், நாம் ஒரு வளர்ந்த மரத்திலிருந்து ஒரு சின்ன கிளையைத் தனியாகப் பிரித்து எடுத்து, அதை ஒரு 90 நாட்கள் வரைக்கும் நான் சொல்லும் ஒரு குறிப்பிட்ட முறையில் பராமரித்து, பிறகு எடுத்து நிலத்தில் நட்டு வைத்தால் போதும். அது, ஒரு டாக்டருக்குப் படித்த ஒருவர் எப்படி தன்னுடைய தேவைகளைத் தானே பூர்த்தி செய்து கொள்கிறாரோ, அதுபோல அந்த சின்ன மரக்கன்றும் தேவையான தண்ணீரையும், சத்துக்களையும் அந்த சுற்றுப்புறச் சூழலில் இருந்தே தானாக எடுத்துக்கொள்ளும். நாம் அதிகமாக மெனக்கெட வேண்டிய அவசியமே இருக்காது. ரொம்பக் குறுகிய காலத்திலேயே அது பெரிய, உயரமாக வளர்ந்த மரமாக உருவெடுத்து விடும். அதோடு அது உயரமாக வளர்ந்திருப்பதால் ஆடு, மாடு போன்ற கால்நடைகளாலும் எந்தவிதமான தொந்தரவும் இருக்காது.
(அர்ஜூனனின் மரம் வளர்ப்பு குறித்த மேலதிக தகவல்கள் அடுத்த இதழில் இடம்பெறும்)
தொடர்புக்கு:
அர்ஜூனன்: 97903 95796.