திருப்பூர்: தாராபுரம் அருகே மரத்தில் கட்டி தொங்கவிட்டு நாய்களை சித்ரவதை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து போலீசார், அப்பகுதியை சேர்ந்த 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மூலனூர் பகுதியில் உள்ள முளையாம்பூண்டி கோயில் மேட்டுப்புதூர் பகுதியில் 2 நாய்கள் மரத்தில் தொங்கவிடப்பட்ட நிலையில் சில நபர்கள் அதனை கட்டையால் தாக்குவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்த விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தனிநபர் ஒருவரின் வளர்ப்பு நாய் மற்றும் தெருநாய் ஆகியவற்றை 2 மரங்களில் கட்டி அதனை கட்டையால் கொடூரமாக தாக்கியதும், இதில் 2 நாய்கள் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கம் சார்பில் மூலனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் போலீசார் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.