சென்னை: குரங்கம்மை அறிகுறிகள் இருந்தால் அதுகுறித்து உடனடியாக சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுதொடர்பாக தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் முதல்முறையாக சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் குரங்கம்மை நோய்க்கு பரிசோதனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குரங்கம்மைத் தொற்று எப்படி பரவுகிறது? யார் யாருக்கு பரவுகிறது? எப்படி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்? என்னென்ன சிகிச்சை முறைகள் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம்: குரங்கம்மை நோய் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் 21 நாட்களுக்குள் காய்ச்சல், தலைவலி, குடல் வலி ஏற்பட்டால் 104 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களை வீட்டுக்கு சென்று சோதனை செய்து சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்படும். அதுமட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் அவரது குடும்பத்தினரையும் தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர்கள் பாதுகாப்பு உடையை அணிந்து பணியாற்ற வேண்டும்.
இந்த நோய் வைரஸ் தொற்று என்பதால் வைரஸ் தொற்று சிகிச்சையை தொடங்க வேண்டும். குரங்கம்மை அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு வரக்கூடியவர்களை கண்காணித்து அதுகுறித்த தகவல்களையும் பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தனியார் மருத்துவனைகள் தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.