காரைக்குடி: காரைக்குடியில் உள்ள அரசு தலைமை மருத்துவமனை 10 ஆண்டுகளுக்கு மேலாக கண்டுகொள்ளப்படாத நிலையில் உரிய மருத்துவர்கள் நியமித்து தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. காரைக்குடி ரயில்வே பீடர் சாலை மற்றும் திருச்சி பைபாஸ் சூரக்குடி சாலை என இரண்டு இடங்களில் அரசு தலைமை மருத்துவமனை செயல்படுகிறது. சிவகங்கையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை துவங்கப்பட்ட பின்னர் அங்கிருந்த தலைமை மருத்துவமனை இங்கு செயல்பட துவங்கியது. இங்குள்ள தலைமை மருத்துவமனையில் தற்போது 300 படுக்கை வசதிகள் கொண்ட கட்டிடம் செயல்பட்டு வருகிறது.
காரைக்குடி மற்றும் சுற்றுப்புற பகுதி, தேவகோட்டை, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், அறந்தாங்கி, ஆவுடையார் கோவில் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் அதிகளவில் வருகிறனர். பொதுவாக இங்கு சுகபிரசவம் பார்க்கப்படுவதால் பிரசவத்திற்கு பெண்கள் அதிகம் வருகிறனர். பொது மருத்துவத்துக்கு தினமும் 200க்கும் மேற்பட்டவர்கள் வரும் நிலையில், பிரசவம் மற்றும் அது சம்மந்தப்பட்ட சிகிச்சைக்கு மட்டும் 50 பேருக்கு மேல் வருகின்றனர். மாதத்தில் 200க்கும் மேற்பட்ட பிரசவம் பார்க்கப்படுகிறது. பல்வேறு வகையான விபத்தில் பாதிக்கப்பட்டு தினமும் 10க்கும் மேற்பட்டவர்கள் வருகின்றனர்.
கடந்த ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுக்காததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பெயரளவில் மட்டுமே தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. விபத்து பிரிவு, தலைகாய பிரிவு, தீக்காய பிரிவு, விஷம் சாப்பிட்டவர்களை காப்பாற்றுவதற்கான சிறப்பு பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, இருதய சிகிச்சை பிரிவு போன்றவை இதுவரை ஏற்படுத்தப்பட வில்லை. 24 மணி நேரம் செயல்படும் ரத்த பரிசோதனை மையம், எக்ஸ்ரே பிரிவுகள் தேவை. அவசர சிகிச்சை பிரிவை மேம்படுத்த வேண்டும். பொது மருத்துவத்துக்கு கூடுதலாக 100 படுக்கை வசதி செய்ய வேண்டும். டாக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் என எந்த பணியிடங்களும் நிரப்பப்பட வில்லை. தலைமை மருத்துவமனையில் 40 டாக்டர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 22 பேர் மட்டுமே உள்ளனர்.
சீமாங் மையத்தில் 5 டாக்டர்களுக்கு ஒருவர் தான் உள்ளனர். கண் மருத்துவம், எலும்பு முறிவு, பல், காது, மூக்கு, தொண்டை, பச்சிளங் குழந்தைகள் மற்றும் நெஞ்சக நோய்கள், தீக்காய பிரிவு, சிடிஸ்கேன் ரேடியாலஜிஸ்ட் டாக்டர், ரெசிடன்சியல் டாக்டர், கிரேடு நர்சுகள், அலுவலக மற்றும் பதிவு அறை பணியாளர்கள் என 40 பேருக்கு மேல் பற்றாக்குறை உள்ளது. ஸ்கேன் இருக்கும் இடத்தில் விபத்து பிரிவு, தலைகாய பிரிவு ஏற்படுத்த வேண்டும் எனவும், ஒருங்கிணைந்த மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது. போதிய டாக்டர்கள் இல்லாததால் கூடுதல் வேலைபளு காரணமாக இருக்கும் பெண் டாக்டர்கள் சிலரும் விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு செல்வதாக கூறப்படுகிறது. சிறு பிரச்னை என்றாலும் சிவகங்கை, மதுரைக்கு அனுப்ப கூடிய நிலை தான் தொடகிறது.
ஒரு சில டாக்டர்கள் முறையாக பணிக்கு வராமல் தங்களது சொந்த மருத்துமனைக்கு செல்வதாக கூறப்படுகிறது. இக்காலியிடங்களை பூர்த்தி செய்து தலைமை மருத்துவமனையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு தொழில் வணிகக்கழகம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. எம்எல்ஏ மாங்குடி கூறுகையில், இங்குள்ள மாவட்ட தலைமை மருத்துவனைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சிகிச்சைக்கு வருகின்றனர். சிறந்த சிகிச்சை கிடைப்பதால் இம்மருத்துவமனைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இது முழுமையான மாவட்ட தலைமை மருத்துவமனையாக செயல்பட வேண்டும். ஸ்கேன் டாக்டர், டயாலசிஸ் பிரிவு என அனைத்து வசதிகளும் செய்யப்பட வேண்டும்.
அனைத்து துறை சிறப்பு டாக்டர்கள் வேண்டும். டாக்டர்கள் தேவை குறித்த பட்டியல் இடப்பட்டு சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளேன். தவிர ரயில்வே ரோட்டில் உள்ள பழைய மருத்துவமனையை அனைத்து வசதிகளுடன் கொண்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற வேண்டும். டாக்டர்கள் இரண்டு மருத்துவமனைக்கும் செல்வதை தடுத்து தனியாக டாக்டர்கள் நியமிக்க வேண்டும் எனவும் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவத்துறை வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதன் மூலம் இந்தியாவிலேயே மருத்துவத்துறையில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உள்ளது. நமது கோரிக்கையையும் பரிசீலனை செய்து உரிய நடவடிப்பை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆகியோரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
தொழில் வணிகக்கழக தலைவர் சாமிதிராவிடமணி கூறுகையில்:
மருத்துவமனையில் காரைக்குடி பகுதி மக்கள் மட்டும் இன்றி புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மக்களும் சிகிச்சைக்கு வருகின்றனர். தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டும் வளர்ச்சியடையாத நிலையே தொடர்கிறது. அதிநவீன மருத்துவச் சிகிச்சை கருவிகள் இருந்தும் அதற்கான சிறப்பு டாக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் சிவகங்கை, மதுரைக்கு என அனுப்பும் நிலை உள்ளது. டாக்டர்கள் பற்றாக்குறை உள்பட அனைத்து பணியாளர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர்,சுகாதார துறை அமைச்சர் மற்றும் சுகாதார துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.