Sunday, June 23, 2024
Home » பயணம்… கவனம்!

பயணம்… கவனம்!

by Karthik Yash

நமது அன்றாட வாழ்வில் சாலைப்பயணத்தை தவிர்க்கவே முடியாது. இந்த பயணங்களை விரைவாக மேற்கொள்வதற்காக நான்கு வழிச்சாலை உள்ளிட்ட சாலை விரிவாக்கம் மிகவும் அவசியமாகிறது. அதேநேரம் கட்டுப்பாடில்லாமல் வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்திற்குள்ளாவதோடு உயிரிழப்பையும் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், விருதுநகர் – திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் கட்டுப்பாடில்லாத வேகத்தில் வந்த கார் விபத்திற்குள்ளாகி நேற்று 6 உயிர்களை பலி வாங்கியுள்ளது. இந்த விபத்து வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி, பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.

அதிவேகமாக வந்த கார், சாலையோரம் சென்று கொண்டிருந்த கொய்யாப்பழ வியாபாரியின் டூவீலரில் மோதி, சாலை தடுப்புகள், 4 டிராக்கையும் தாண்டி எதிர்ப்புற சர்வீஸ் சாலையில் பறந்து சென்று விழுந்தது என்றால்… அந்தக் கார் வந்த அதிவேகத்தை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதில் வியாபாரியும் பலியாகி உள்ளார். இன்னும் சில அடி கார் தள்ளி விழுந்திருந்தால் அங்கிருந்த டீக்கடைக்குள் பாய்ந்து, டீ அருந்திக் கொண்டிருந்தவர்களையும் நசுக்கியிருக்க வாய்ப்புண்டு. திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்று விட்டு வரும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது.

இன்று நேற்றல்ல… நெடுங்காலம் தொட்டு பெரும்பாலானோர் நெடுந்தூரங்கள் செல்ல பகல் பயணத்தை தவிர்த்து, இரவுப்பயணங்களையே மேற்கொள்வார்கள். தூங்கிச் செல்லலாம் என்ற எண்ணமே அதற்கு காரணம். இரவு பயணத்தை ரெகுலராக மேற்கொள்ளும் டிரைவர்கள், பகலில் ஆழ்ந்து உறங்க வேண்டும். இரவு பயணத்தின்போது, இடையிடையே சிறிது ஓய்வெடுத்து டீ, காபி அருந்தி, கொஞ்சம் புத்துணர்வு செய்து கொள்ள வேண்டும். அதனால்தான் ஆம்னி பஸ்களில் 2 டிரைவர்களை பணிக்கு அமர்த்துகின்றனர்.

ஆனால், இன்று பெரும்பாலும் செல்ப் டிரைவ் செய்கிறார்கள். என்றாவது ஒரு நாள் பயணம் மேற்கொள்ளும்போது, அதிகாலை நேரங்களில் அவர்களை அறியாமலே கண் அயர்ந்து விடுகின்றனர். இதுவே விபத்தினை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தள்ளி விடுகிறது. மது அருந்தி கட்டுப்பாடில்லாமல் ஓட்டும் பழக்கமும் அதிகரிக்கிறது. இந்திய அளவில் கடந்த சில ஆண்டுகளாக நள்ளிரவு மற்றும் அதிகாலை பயணங்கள்தான் உயிரிழப்பை அதிகம் ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி 11 முதல் 17ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனாலும், விபத்துகள் தொடர்வது கவலை தருகிறது.

இந்தியாவை பொறுத்தவரை கடந்த 2022ம் ஆண்டு சாலை விபத்துகளில் மட்டும் 1.68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு மணி நேரத்துக்கு 19 பேர் சாலை விபத்தில் இறப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. ஆண்டுதோறும் 9.5 – 11 சதவீதம் விபத்து பலிகள் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலக அளவில் அதிக விபத்து நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. மாநில அளவில் மஹாராஷ்டிரா, தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகளவு நடந்து வருகின்றன. இதற்கு அதிவேகமாக ஓட்டுதல், மது அருந்தி ஓட்டுதல், போக்குவரத்து விதிகளை மதிக்காதது, தூக்கமின்றி பயணித்தல் உள்ளிட்டவைகளை காரணமாக குறிப்பிட்டுள்ளனர். சாலைகள் எல்லாம் விரைவாக பயணம் செல்ல மட்டுமே… அதில் நம் உயிரை பணயம் வைக்க வேண்டாமே…! இனியாவது பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்வோம்.

You may also like

Leave a Comment

10 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi