Saturday, July 19, 2025
Home ஆன்மிகம் ?பயணம் செல்லும் முன் எந்தக் கடவுளை வணங்குவது நல்லது?

?பயணம் செல்லும் முன் எந்தக் கடவுளை வணங்குவது நல்லது?

by Lavanya

– த.சத்தியநாராயணன், அயன்புரம்.
சுப்ரமணிய ஸ்வாமியை வணங்க வேண்டும். தரைவழிப் போக்குவரத்து எனும்போது அதாவது சாலை வழிப்பயணமோ அல்லது ரயிலின் மூலமாக பயணிக்கும்போதோ சுப்ரமணிய ஸ்வாமியை வணங்கிவிட்டு செல்வது நல்லது. ஆகாய மார்க்கமாக பயணிக்கும்போது அதாவது விமானப் பயணத்திற்கு முன்னதாக பரமேஸ்வரனையும் நீர்வழியில் பயணிக்கும்போது அதாவது கப்பல் அல்லது படகில் பயணிப்பதற்கு முன்னதாக மஹாவிஷ்ணுவையும் வணங்கிவிட்டுச் செல்வது நல்லது.

?நித்தியகல்யாணி பூக்களால் பூஜை செய்யலாமா?

– பி.கனகராஜ், மதுரை.
இது அரளியைப் போன்ற ஒரு செடிவகையைச் சார்ந்தது. இந்தச் செடிகள் பெரும்பாலும் சுடுகாட்டில் வளர்வதால், உங்களுக்கு இந்த சந்தேகம் என்பது தோன்றியிருக்கிறது. இந்த உலகில் படைக்கப்பட்டவை யாவுமே இறைவனுக்குச் சொந்தம்தான். ஆகையால், தாராளமாக இந்தப் பூக்களைக் கொண்டு இறைவனை பூஜிக்கலாம் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து. அதற்காக இந்தப் பூக்களை சுடுகாட்டில் இருந்து பறித்து வர வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தனியாக நந்தவனத்தில் வளர்ந்திருக்கும் செடிகளில் இருந்து இந்த பூக்களைப் பறித்து வந்து அர்ச்சனைக்குப்
பயன்படுத்தலாம்.

?கிணற்றை பூஜை செய்து மூடிவிட்டு அதன்மீது வீடு கட்டலாமா?

– சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
நீரால் சூழப்பட்டதே இவ்வுலகம். நாம் நிலப்பரப்பு என்று கருதும் பகுதியில்கூட பூமிக்கு கீழே நீரோட்டம் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது. வீட்டில் கிணறு இருக்கிறது எனும்போது, அந்த இடத்தில் நீரோட்டம் என்பது நன்றாக உள்ளது என்றுதான் பொருள். கண்டிப்பாக கிணற்றை மூடித்தான் ஆகவேண்டும் என்ற சூழல் உண்டாகும் பட்சத்தில் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் அதற்குரிய பூஜைகளைச் செய்ய வேண்டும். வருணணை பிரார்த்தனை செய்து பரிகார பூஜைகளைச் செய்த பின்னரே கிணற்றை மூட வேண்டும். அதன்பின் தாராளமாக அந்த இடத்தில் வீடு கட்டலாம். அதில் எந்தவிதமான தோஷமும் வந்து சேராது.

?பரிகாரம் என்ற பெயரில் பொருள் விரயமே தவிர சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக பலன் கிடைப்பது இல்லையே?

– ஆர்.கே.லிங்கேசன்,மேலகிருஷ்ணன்புதூர்.
ஜனன ஜாதகத்தின்படி அவரவருக்குரிய தசாபுக்தி காலங்களில் அதற்கென விதிக்கப்பட்ட பலன்களை அனுபவித்தே ஆக வேண்டும். பூர்வ புண்னியத்தின் அடிப்படையில் விதிப்பலன்கள் எழுதப்படுகின்றன. தீயகிரஹங்களின் தசாபுக்தியும், சரியில்லாத கிரஹ நிலையும் நிலவும்போது, கெடுபலன்களை அனுபவித்து ஆக வேண்டும் என்பது விதி. இந்த நிலையில், பிறந்த ஜாதகத்தில் பூர்வ புண்ய ஸ்தானம் வலுவாக இருந்துவிட்டால், அம்மனிதன் செய்யும் பரிகாரங்கள் நிச்சயம் பலிக்கும். கெடுபலன்கள் மறைந்து நிச்சயம் நற்பலன்கள் கிடைக்கும். மாறாக பூர்வ புண்னிய ஸ்தானம் வலுவற்று இருந்தால் அவன் அனுபவிக்க வேண்டியதை நிச்சயமாக அனுபவித்தே ஆக வேண்டும். அதிலிருந்து தப்பிக்கும் வழிமுறையைத் தேடக்கூடாது. பலனை அனுபவிப்பதே அவன் செய்யும் பரிகாரம். மாறாக தப்பிக்கும் வழிமுறையாக பரிகாரங்களைத் தேடத் தொடங்கினால், நல்ல தசாபுக்தி காலத்திலும் நற்பலன்களை அனுபவிக்க இயலாது போய்விடும். கெட்ட நேரத்தில் அவன் கெடுபலன்களை அனுபவித்து விட்டானேயாகில், நல்ல தசாபுக்தி நடக்கும் காலத்தில் நற்பலன்களையும் அனுபவிப்பான். ஐம்பெருங்காப்பியங்களுள் பிரதானமான சிலப்பதிகாரம் நமக்குச் சொல்வது “ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’’ என்பதுதானே. ஊழ்வினைப் பயனை அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்பது அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. பரிகாரங்கள் செய்வதால் கெடுபலன்கள் உண்டாக்கும் தாக்கத்தினை வேண்டுமானால் குறைத்துக்கொள்ள முடியும். ஆயினும் அதன் அடிப்படைப் பலனை நிச்சயம் அனுபவித்தே ஆகவேண்டும். பரிகாரம் என்பது செய்த தவறுக்கான பிராயச்சித்தம் அல்ல. விதிப்பயனை மாற்றி அமைக்கும் வழிமுறையும் அல்ல. பரிகாரம் செய்வதால், விதிப்பயனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கிறது. மனம் பக்குவம் அடைந்தாலே துன்பம் என்பது காணாமல் போகிறது.

?அன்னபூரணி விக்ரஹத்தை வீட்டில் வைத்து பூஜிக்கும் முறையைச் சொல்லுங்கள்.

– மாயூரம் இளங்கோ, மயிலாடுதுறை.
எந்த விக்ரஹமாக இருந்தாலும், வீட்டில் வைத்து பூஜிக்கும்போது அது அளவில் சிறியதாக இருக்க வேண்டும். “அங்குஷ்ட மாத்ரம்’’ என்று சொல்வார்கள். அதாவது கட்டை விரல் அளவிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்னபூரணி விக்ரஹத்தை பூஜிப்பது என்பது எளிதானது. ஒரு சிறு கிண்ணத்தில் அரிசியை நிரப்பி அதன்மேல் அன்னபூரணி விக்ரகத்தை நன்றாகப் பதிந்து நிற்கும்படி அழுத்தி வைக்க வேண்டும். “அன்னபூர்ணே ஸதாபூர்ணே’’ என்று தொடங்கும் ஸ்லோகத்தைச் சொல்லி தினந்தோறும் வழிபட்டு வரலாம். வாரம் ஒரு முறை அதாவது திங்கட்கிழமை நாளில் விக்ரகத்தை வெளியே எடுத்துவைத்து அபிஷேக அலங்காரங்களைச் செய்து கிண்ணத்தில் உள்ள அரிசியை புதியதாக மாற்றி வைத்து வழிபட வேண்டும். ஏற்கெனவே கிண்ணத்தில் இருந்த பழைய அரிசியை உணவினில் சேர்த்துவிடலாம். வாரம் ஒரு முறை அவ்வாறு அபிஷேகம் செய்ய இயலாதவர்கள், குறைந்தபட்சமாக மாதம் ஒரு முறை அதாவது பௌர்ணமி நாளில் மட்டுமாவது அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது. அவசியம் மாதம் ஒருமுறையாவது விக்ரகத்திற்கு கீழ் உள்ள அரிசியை மாற்றிவிட வேண்டும். நாம் தினமும் சமைக்கின்ற சாதத்தையே சாப்பிடுவதற்கு முன்னதாக நிவேதனம் செய்தால் போதுமானது.

?பெண்கள் முகத்திற்குமஞ்சள் பூசிக் குளித்தால் மங்களகரமான நல்ல விஷயங்கள் நடக்கும் என்பது உண்மையா?

– கே.எம்.ஸ்வீட்முருகன்,கிருஷ்ணகிரி.
நிச்சயமாக. மஞ்சள் என்பதே மங்களகரமான பொருள்தானே. அறிவியல் ரீதியாக ஆன்ட்டிசெப்டிக் மற்றும் ஆன்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது என்பதைத் தாண்டி, ஆன்மிக ரீதியாக மஞ்சள் என்பது நவகிரஹங்களில் குருவின் ஆதிக்கத்தைப் பெற்றது என்று சொல்வார்கள். குருவருள் இருந்தால் திருவருள் என்பது தானாக வந்து சேரும். அதாவது, திரு என்றால் மகாலட்சுமி என்று பொருள். மஞ்சள் பூசிக் குளிக்கும் பெண்களிடம் இயற்கையாகவே லட்சுமி கடாட்சம் என்பது வந்து சேர்ந்துவிடுகிறது. அதனால், இல்லத்தில் தொடர்ந்து மங்களகரமான நல்ல விஷயங்கள் என்பதும் நடக்கிறது. மஞ்சள் பூசி குளித்திருக்கும் பெண்களைக் காணும்போதே அவர்களை கையெடுத்து வணங்க வேண்டும் என்கிற எண்ணம் நம்மையும் அறியாமல் வந்துசேர்வதை அனுபவத்தில் நேரடியாகவே உணர இயலும்.

திருக்கோவிலூர் K.B. ஹரிபிரசாத் சர்மா

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi