சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் தழுவிய அளவில் 9 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் நல அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச்செயலாளர் கே.கர்சன் கூறியதாவது: போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பிரச்னை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. ஓய்வூதியர்களுக்கு 106 மாதங்களாக அக விலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதனை வழங்க ஐகோர்ட் உத்தரவிட்ட பின்னரும், மேல்முறையீடு செய்து காலம் தாழ்த்தப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் ஓய்வு பெற்றோருக்கு பணப்பலன் வழங்கப்படவில்லை. மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை. இந்த பிரச்னைகளில் விரைந்து தீர்வு காண வலியுறுத்தி, கடந்த 16ம் தேதி முதல் வீடுதோறும் தொழிலாளர்களிடமும், பொதுமக்களிடமும் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சார இயக்கத்தை நடத்தி உள்ளோம். இதன்தொடர்ச்சியாக இன்று (27ம் தேதி) மாநிலம் முழுவதும் 9 இடங்களில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். சென்னையில் பல்லவன் இல்லம் அருகே மறியல் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.