Friday, July 18, 2025
Home மாவட்டம்சென்னை சாலை பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்த 26 டிராபிக் மார்ஷல் வாகனங்கள் அறிமுகம்:  ஓஎம்ஆர், இசிஆர், ரேடியல் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ரோந்து  தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் தொடங்கி வைத்தார்

சாலை பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்த 26 டிராபிக் மார்ஷல் வாகனங்கள் அறிமுகம்:  ஓஎம்ஆர், இசிஆர், ரேடியல் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ரோந்து  தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் தொடங்கி வைத்தார்

by Neethimaan

தாம்பரம்: சாலை பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்த 26 டிராபிக் மார்ஷல் வாகனங்கள் தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் தொடங்கி வைத்தார். இந்த டிராபிக் மார்ஷல் வாகனங்கள் ஓஎம்ஆர், இசிஆர், ரேடியல் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மையை மேம்படுத்துவதற்காக 26 டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி குரோம்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று நடந்தது. இதில், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் கலந்துகொண்டு 26 டிராபிக் மார்ஷல் இருசக்கர வாகனங்களை கொடி அசைத்து பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

இந்த வாகனங்கள் தாம்பரம் நகரத்திற்குள் உள்ள முக்கிய சாலைகளான ஜிஎஸ்டி, ஓஎம்ஆர், இசிஆர், 200 அடி ரேடியல் சாலை மற்றும் பிற முக்கிய சாலைகளில் ரோந்து செல்லும். ஒவ்வொரு வாகனத்திலும் பொது முகவரி அமைப்பு, சைரன் மற்றும் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு ரோந்து மற்றும் நெரிசல் நேரங்களில் தெரிவுநிலையை மேம்படுத்த போக்குவரத்து மார்ஷல்கள் 8 மணி நேர ஷிப்டுகளில் பணிபுரிவார்கள். போக்குவரத்து நெரிசல் நேரங்களில் அதிக கவனம் செலுத்துவார்கள். போக்குவரத்து நெரிசலை நீக்குதல், விபத்து நடந்த இடத்தில் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவியும், போக்குவரத்தை சரிசெய்யவும், சாலையில் பழுதடைந்து நிற்கும் வாகனங்களை உடனடியாக அகற்ற உதவுதல் மற்றும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதி செய்தல் ஆகியவை டிராபிக் மார்ஷல்களின் முக்கிய கடமைகளாகும்.

சாலைகளை பாதுகாப்பானதாகவும், மிகவும் உறுதியானதாகவும் மாற்ற தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை, பல மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முக்கிய சாலைகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு தனி கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 150க்கும் மேற்பட்ட சாலையோர தள்ளுவண்டி உணவுக் கடைகள் அகற்றப்பட்டுள்ளன.

ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தியதின் காரணமாக ஹெல்மெட் அணிந்துகொண்டு பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உரிய சட்ட நடவடிக்கையின் மூலம் தவறான திசையில் வாகனம் ஓட்டியதற்காக 4000க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, துரித நடவடிக்கையால் காமாட்சி மருத்துவமனை சந்திப்பில் உள்ள சிக்னலில் நிற்க ஏற்படும் காலதாமதம் விரைவாக குறைக்கப்பட்டு திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகிறது. குன்றத்தூரில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஒருவழிப் பாதை முறையை அமல்படுத்தியது போன்ற முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாடுகள் போக்குவரத்து பிரிவால் செய்யப்பட்டு வருகிறது. இந்த முயற்சிகளின் விளைவாக, போக்குவரத்து விதி அமல்படுத்துவது கணிசமாக அதிகரித்துள்ளது. பொது விழிப்புணர்வு மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தும் விதமாக நோ ஹெல்மெட் நோ ரைட் திட்டம் போன்ற பிரசாரங்கள் மூலம் ஹெல்மட் பயன்பாட்டை பொதுமக்களிடம் கொண்டு சென்று நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆட்டோ, டாக்ஸி ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வுகள் நடத்தியதின் மூலம் விதியை பின்பற்றி வாகனம் ஓட்டும் நடைமுறையில் நல்ல முன்னேற்றம் வந்துள்ளது.

சாலை பாதுகாப்பு மேம்பட்டுள்ளதால், சாலை விபத்து மரணங்கள், 51ஆக குறைந்துள்ளன. இது கடந்த ஆண்டைவிட 24 சதவீதம் குறைவாகும். சாலைப் பாதுகாப்பும் மேம்பட்டுள்ளது, உயிரிழப்பு அல்லாத கடுமையான விபத்துகளும் 159 ஆக குறைந்துள்ளன. உள்ளூர் குடிமை அமைப்புகள், சாலை அதிகாரிகள் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியோருடன் ஒருங்கிணைந்து விபத்துக்குள்ளாகும் பகுதி அல்லது ‘கரும்புள்ளி பகுதி’ என அடையாளம் காணப்பட்டு தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது, என தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மோட்டார் வாகன சட்டத்தின் கீழ்

* ஜூன் 2025 வரை மொத்தம் 2,25,109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது 2024ல் 1,50,778 வழக்குகளாக இருந்தது.

* தலைக்கவசம் அணியாதோர் மீதான வழக்குகள் 48,551 ஆக உயர்ந்துள்ளன, இது கடந்த ஆண்டு 26,051 ஆக இருந்தது.

* குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 2025ம் ஆண்டில் 4,827 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, இது 2024ல் 1,937 ஆக இருந்தது. கடுமையான தண்டனைகளின் ஒரு பகுதியாக அனைத்து குற்றவாளிகளின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவது அதிகரித்துள்ளதால் விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi