சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையம் முதல் கடைசி கட்ட இணைப்பு வரைக்கான போக்குவரத்து சேவைகளை இயக்க சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில்வே அதிகாரி கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும் போது சிறிய மின்சார வாகனங்களைப் பயன்படுத்தி மெட்ரோ ரயில் நிலையங்களை அடையலாம். அதன்படி சிறிய மின்சார பேருந்துகள் மற்றும் மின்சார ஆட்டோக்கள் இயக்க தமிழக அரசிடம் அனுமதி பெறப்படும். இருப்பினும் வாகனங்கள் கொள்முதல், வழித்தடங்கள், இயக்கம், வாகனங்களுக்கான சார்ஜிங் பாயிண்ட்கள், கட்டணங்கள் போன்ற வழிமுறைகளை திட்டமிட்ட பின்னர் அனுமதி பெறப்படும்.
இந்த திட்டத்தை தனியார் நிறுவனத்துடன் இணைந்து அல்லது சொந்தமாக செயல்படுத்தலாம் என முடிவெடுக்கப்படும். மேலும் கிளாம்பாக்கம் மெட்ரோ சேவை இல்லாததால் பேருந்து நிலையம் திறக்கப்படும்போது, விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தை அடைவதற்காக அங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படும். இந்த திட்டத்தை முதல்கட்ட மெட்ரோ ரயில் நிலையம் தொடங்கும் போது செயல்படுத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டது.
தற்போது மாநகர போக்குவரத்து கழகத்துடன் இணைந்து சில முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களில் 22 சிறிய பேருந்துகளை இயக்கி வருகிறது. இதனால் அதிக பணம் செலவழிக்கின்றனர். 4 ரயில் நிலையங்களில் இருந்து 40 எலக்ட்ரிக் ஆட்டோக்கள் ஐடி போன்ற பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பிற பகுதிகளுக்கும் கடைசி கட்ட இணைப்பு வரைக்கும் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.