சென்னை: 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை விரைந்து முடிக்க அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து பயிற்சி பணிமனையில் 15-வது ஊதிய ஒப்பந்த தொடர்பான பேச்சுவார்த்தை நேற்றும் இன்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடந்தது. நேற்று தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் பங்கேற்று தங்களுடைய கோரிக்கைகளை அரசிடம் தெரிவித்தது. இரண்டாவது நாளான இன்று 74 சங்கங்கள் அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்தனர்.
பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “15 வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தொழிற்சங்கங்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அந்தக் கோரிக்கைகளில் சில நிதி துறையிடம் கலந்து பேச வேண்டி உள்ளது. அதேபோல முதல்வரிடமும் சில கோரிக்கைகளை கொண்டு செல்லப்பட உள்ளது. இதில் எந்தெந்த கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்பதை அறிந்து இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படும்.
இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு ஊதிய உயர்வு ஒப்பந்தம் இறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையை விரைந்து முடிக்க அரசும் போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்றார். இதே போல் இன்று பேச்சுவார்த்தையில் பங்கேற்ற பல்வேறு தொழிற்சங்கங்களும் போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக மாற்றுவதன் மூலம் தங்களுடைய கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்தனர். எனவே அரசு அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேச்சு வார்த்தையில் வலியுறுத்தியதாக கூறினர்.