புதுடெல்லி: உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காக உரிய நேரத்தில் உடல் உறுப்புகள் கொண்டு செல்லப்படுவதை உறுதிபடுத்த ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் முதல் முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. உடல் உறுப்புகளை தானம் செய்யும் பழக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதில் உடல் உறுப்புகள் கொண்டு செல்லப்படும் நேரம் தான் இன்றியமையாதது. அதே போல ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு உடல் உறுப்புகள் பத்திரமாக கொண்டு செல்லப்படுவதும் முக்கியம்.
இதனை உறுதி செய்யும் வகையில், உடல் உறுப்புகளை கொண்டு செல்வதற்காக முதல் முறையாக வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, விமானத்தில் உடல் உறுப்புகள் கொண்டு செல்லப்படும் போது, அந்த விமானங்களின் புறப்பாடு மற்றும் தரை இறங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். உடல் உறுப்புகளை வைக்க முன்வரிசை இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும். உடல் உறுப்புகளை கொண்டு செல்லும் மருத்துவ பணியாளர்களின் டிக்கெட் முன்பதிவிற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
விமானத்தில் உடல் உறுப்பு கொண்டு செல்லப்படுவது தொடர்பாக பயணிகளுக்கு விமானி அறிவிக்க வேண்டும். ரன்வே வரையிலும் ஆம்புலன்ஸ்கள் அனுமதிக்கப்படும் சமயத்தில் உறுப்புகளை எடுத்து வரும் மருத்துவ பணியாளர்களுக்கு உதவ விமான நிறுவன ஊழியர்கள் ஆம்புலன்சில் தயார் நிலையில் இருக்க வேண்டும். சாலை மார்க்கமாக கொண்டு வரும் போது தனி பாதை உருவாக்கப்பட வேண்டும். இதற்கு போக்குவரத்து காவலர்கள் உதவ வேண்டும். இதேபோல், ரயில், கப்பல் மூலமாக கொண்டு செல்வதற்கான பல்வேறு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுளளன.