டெல்லி : ஒருவர் தனக்கான இணையை தேர்ந்தெடுப்பது அவரது உரிமை. அவர் தேர்ந்தெடுத்த இணையை அங்கீகரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தன் பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாகச் அங்கீகரிக்க கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எஸ்.ஆர்.பட், மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் தீர்ப்பு வழங்கி உள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கி உள்ள தீர்ப்பில், “திருமணம் ஒரு நிலையான மற்றும் என்றும் மாறாத அமைப்பு என கூறுவது சரியல்ல, திருமணத்தில் சீர்திருத்தங்கள் சட்டங்களால் கொண்டு வரப்பட்டுள்ளன.திருமண சீர்திருத்தங்கள் என்பது சட்டத் திருத்தங்கள் மூலமே மேற்கொள்ள வேண்டும்.
திருமண முறையில் சட்டப்படியே பல்வேறு மாற்றங்கள் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ளன. தன்பாலின ஈர்ப்பு என்பது நகர்ப்புற மேல் தட்டுச் சமூகத்தைச் சார்ந்தது மட்டுமல்ல.பொதுமக்களின் அடிப்படை உரிமைகளைக் காக்கும் பொறுப்பு அரசியல் சட்டப்படி நீதிமன்றங்களுக்கு உள்ளது. அதே நேரம் நீதிமன்றங்கள் சட்டங்களை இயற்ற முடியாது. நாடாளுமன்றமே சட்டங்களை இயற்ற முடியும்.சிறப்பு திருமணச் சட்டம் ரத்து செய்யப்பட்டால், அது நாட்டை சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திற்கு கொண்டுச் செல்லும்.சிறப்பு திருமண சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து நாடாளுமன்றமே முடிவு எடுக்கும்.
ஒரு நபரின் பாலினம் அவரின் பாலின ஈர்ப்புடன் தொடர்புடையதல்ல. ஒரு திருநங்கையின் திருமணம் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவரால் ஒரு பாலின உறவில் இருக்க முடியும் என்பதால் அத்தகைய திருமணங்கள் சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படலாம்.தன்பாலின நபர்களிடம் பாகுபாடு காட்ட முடியாது என்பதை இந்த நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது, மாற்றுப்பாலின தம்பதிகளுக்கு வழங்கப்படும் பொருள், நன்மைகள் மற்றும் சேவைகள், ‘QUEER’ ஜோடிகளுக்கு மறுக்கப்படுவது அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்.ஒருவர் தனக்கான இணையை தேர்ந்தெடுப்பது அவரது உரிமை. அவர் தேர்ந்தெடுத்த இணையை அங்கீகரிக்க வேண்டும், தன்பாலினத்தவர்கள் எந்த வகையிலும் பாகுபாட்டுடன் நடத்தப்படக்கூடாது என்பதை ஒன்றிய, மாநில அரசுகள் உறுதிபடுத்தப்பட வேண்டும்,”என்று தெரிவித்தார்.