திருவனந்தபுரம்: கோழிக்கோட்டை சேர்ந்த திருநங்கை தம்பதியினரின் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தாய், தந்தை என தனித்தனியாக குறிப்பிடுவதற்கு பதிலாக பெற்றோர் என குறிப்பிடலாம் என்று கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர்கள் சஹத், சியா பவல். இவர்களில் சியா பவல் திருநம்பியாகவும், சஹத் திருநங்கையாகவும் இருந்தனர். இந்நிலையில் இருவரும் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து சியா பவல் திருநங்கையாகவும், சஹத் திருநம்பியாகவும் மாறினர். பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 2 வருடங்களுக்கு முன் இவர்களுக்கு குழந்தை பிறந்தது. இந்தியாவிலேயே குழந்தை பெற்ற முதல் திருநங்கை தம்பதியினர் இவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் கோழிக்கோடு மாநகராட்சி வழங்கிய இவர்களது குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தந்தை என்ற இடத்தில் சியா பவலின் பெயரும், தாய் என்ற இடத்தில் சஹதின் பெயரும் இருந்தது. இது எதிர்காலத்தில் குழந்தைக்கு பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால் தந்தை மற்றும் தாயின் பெயரை மாற்றித் தரக்கோரி இவர்கள் கோழிக்கோடு மாநகராட்சியில் விண்ணப்பித்தனர். ஆனால் அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் மறுத்து விட்டனர். தொடர்ந்து இவர்கள் இருவரும் கேரள உயர்நீதிமன்றத்தை அணுகினர். இவர்களது மனுவை விசாரித்த நீதிபதி சியாத் ரகுமான், தாய், தந்தை என தனித்தனியாக குறிப்பிடாமல் பெற்றோர் என்று குறிப்பிட்டு புதிய பிறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோழிக்கோடு மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார்.