* 811 திருநங்கைகள் சுயதொழில் மானியம்
* ஆண்டுதோறும் திருநங்கைகளுக்கான சிறப்பு விருது
சென்னை: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அரவாணிகளும் இந்தச் சமுதாயத்தின் அங்கம் என்பதால் அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக, “தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்” கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டு, அரவாணிகளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் வகையில் அவர்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைக் வழங்கினார்கள். அத்துடன் அரவாணிகள் என்னும் பெயரை திருநங்கையர் எனவும் மாற்றி அறிவித்தார்கள். அதன் பிறகு அரவாணிகள் நலவாரியம் திருநங்கையர் நலவாரியம் என வழங்கப்படுகிறது.இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு திருநங்கையர்களுக்கு பல்வேறு வகையில் அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதன் விவரம்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநங்கையர் நலவாரியத்தினை 15 அலுவல்சார் உறுப்பினர்கள் 13 (10 திருநங்கைகள், 1 திருநம்பி, 1 இடைபாலினர் மேலும் 1 பெண் உறுப்பினர்) அலுவல் சாரா உறுப்பினர்களுடன் 2025ம் ஆண்டில் திருத்தியமைத்தார்கள். திருநங்கைகள் நலவாரியத்தின் வாயிலாக அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீட்டு அட்டை, தையல் இயந்திரம், சொந்த தொழில் தொடங்கிட மானியம், சுய உதவிக்குழுக்கள் அமைத்துப் பயிற்சி அளித்தல், 40 வயதிற்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஓய்வூதியத் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திருநங்கைகளுக்கான ஓய்வூதியம்:வாழ்வாதாரச் செலவுகளுக்கு வருமானம் ஈட்ட இயலாத 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற ஏழ்மை நிலையிலுள்ள திருநங்கைகளுக்கு மாதந் தோறும் ரூ.1,000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது அந்த ஓய்வூதியத் தொகையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,500 ஆக உயர்த்தி உத்திரவிட்டார். இத்திட்டத்தின் கீழ், 2022-2023ம் நிதியாண்டிற்கு 1,311 திருநங்கைகளுக்கு ஓய்வூதியமாக ரூ.1.53 கோடியும், 2023-2024ம் நிதியாண்டில் 1,482 திருநங்கைகளுக்கு ரூ.2.49 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 2024-2025ம் நிதியாண்டிற்கு ரூ.2.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 1,599 திருநங்கைகளுக்கு 2025 மார்ச் மாதம் வரை ரூ.281.76 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2025-2026ம் நிதியாண்டிற்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதில் 1,760 திருநங்கைகள் பயன்பெற்று வருகின்றனர்.
கொரோனா நிவாரண உதவித் தொகை: கொரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தல் காலத்தில், திருநங்கைகள் நல வாரியத்தின் கீழ் அடையாள அட்டை பெற்ற குடும்ப அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு முதற்கட்டமாக 8,493 திருநங்கைகளுக்கு தலா ரூ.2,000, இரண்டாம் கட்ட நிவாரண உதவித்தொகையாக 8,591 திருநங்கைகளுக்கு தலா ரூ.2,000 ஆகமொத்தம் ரூ.3.40 கோடி வழங்கப்பட்டுள்ளது.
கைபேசி செயலி:தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி திருநங்கைகளின் நலனை மேம்படுத்தும் விதமாக, அனைத்து திருநங்கைகளும் தங்களது சுயவிவரங்களைப் பதிவு செய்துகொள்ள சிறப்பு முயற்சியாக 2021ம் ஆண்டு ”திருநங்கை” என்னும் கைபேசி செயலி உருவாக்கப்பட்டது, அதன் மூலம் திருநங்கைகளின் சுய விவரங்கள் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை பெறுவது எளிமையாக்கப்பட்டது அதன் பயனாக 10,153 திருநங்கைகள் அடையாள அட்டைகளைப் பெற்றுள்ளனர்.
திருநங்கைகளுக்கான சிறப்பு விருது: திருநங்கைகள் தங்கள் சொந்த முயற்சியில் படித்து, தனித் திறமை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி திருநங்கைகளின் நலனிற்காக சிறப்பான முறையில் சேவை புரிந்து, அவர்களுள் முன்மாதிரியாகத் திகழும் திருநங்கை ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் திருநங்கைகள் தினமான ஏப்ரல் 15ம் நாளன்று “திருநங்கைகளுக்கான சிறப்பு விருது’’ ரூ.1,00,000க்கான காசோலை மற்றும் சான்றிதழுடன் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் கிரேஸ் பானு என்பவர்க்கு திருநங்கைக்கு 2021ம் ஆண்டிற்குரிய திருநங்கைக்கான சிறப்பு விருதை வழங்கிப் பாராட்டினார்கள்.
அது போலவே, விழுப்புரம் மாவட்டம் எ. மர்லிமா என்பவருக்கு 2022ம் ஆண்டிற்குரிய திருநங்கைக்கான சிறப்பு விருதும், வேலூர் மாவட்டம் பி. ஐஸ்வர்யா என்பவருக்கு 2023ம் ஆண்டிற்குரிய திருநங்கைக்கான சிறப்பு விருதும்,கன்னியாகுமாரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த சந்தியா தேவி என்பவருக்கு 2024ம் ஆண்டிற்குரிய திருநங்கைக்கான சிறப்பு விருதும், நாமக்கல் மாவட்டம் ரேவதி என்னும் திருநங்கைக்கும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னி என்னும் திருநங்கைக்கும் ஆக இருவருக்கு 2025ம் ஆண்டிற்குரிய திருநங்கைகான சிறப்பு விருதுகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிப் பாராட்டினார்கள்.
சுயதொழில் மானியம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தைப் பொருளாதார ரீதியாக உயர்த்தி, சமுகத்தில் அவர்களுக்கு அங்கீகாரத்தினை வழங்கும் நோக்கத்துடன், அவர்கள் சொந்தமாகத் தொழில் தொடங்க மானிய வழங்கும் திட்டத்தினை உருவாக்கினார்கள். அதடன் மூலம் அவர்கள் தொடங்கும் தொழிலின் தேவைக்கேற்ப ரூ.50,000 வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் 2021 ஒவ்வொரு ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை 811 திருநங்கைகள் சுயதொழில் மானியம் பெற்றுப் பயனடைந்துள்ளனர்.
திருநங்கைகளுக்கான கல்விக் கனவு திட்டம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருநங்கைகளும் மற்றவர்களைப் போன்றே சமமாக உயர்கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் விதமாக 2024-2025ம் நிதியாண்டு முதல் உயர்கல்வி பயில விரும்பும் திருநங்கைகளுக்கான கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம் உட்பட அனைத்துச் செலவினங்களையும் வாரியத்தின் மூலம் வழங்கிட உத்தரவிட்டார்கள். இத்திட்டத்திற்கென 2024-2025ம் நிதியாண்டிற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 4 திருநங்கைகளுக்கு கல்விக் கட்டணத் தொகை திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “எல்லார்க்கும் எல்லாம்” என்னும் குறிக்கோளுடன் நடைபெற்றுவரும் திராவிட மாடல் ஆட்சியில் மனிதநேயத்துடன், திருநங்கையர் சமுதாயமும் சுயமரியாதையுடன் வாழ்வதற்காகப் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்திச் செயல்படுத்தி வருகிறார்கள், அந்த வகையில் மானியத்துடன் சுயதொழில் தொடங்குதல் முதலான திராவிட மாடல் அரசின் பல்வேறு திட்டங்களால் திருநங்கையர் பெருமளவில் பயனடைகிறார்கள். திருநங்கையர்க்கான சிறப்புத் திட்டங்கள் வாயிலாக செயல்பட முடியாதவர்களையும் செயல்பட வைக்கும் சிறந்த அரசாக திராவிட மாடல் அரசு இந்திய அளவில் புகழ் பெற்று விளங்குகிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.