சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவரும், மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினருமான ரெ.தங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: மாற்றுத்திறனாளிகள் மத்திய, மாநில அரசு துறைகளில் பணிகளில் சேருவதற்கு, போட்டி தேர்வுகளில் பங்குபெற அவர்களுக்கான வயது தளர்வு 40-45 வரை உள்ளது. இதனால், மாற்றுத்திறனாளிகள் காலம் கடந்து பணியில் சேருகிறார்கள்.
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, 25 ஆண்டுகள் பணிக்காலம் முடித்தவர்களுக்கு மட்டுமே புதிய ஓய்வூதியம் பெற தகுதியானவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால் 40-45 வயது உள்ளவர்களின் பணி காலம் கணக்கிடும்போது புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியற்றவர்களாகி விடுகிறார்கள். எனவே மாற்றுத்திறனாளிகளை சிறப்பினமாக கருதி ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்காலம் 15 ஆண்டுகள் என நிர்ணயித்து, ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.