மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் கடந்த சில மாதங்களில் ரூ.167 கோடி மதிப்பிலான 267 கிலோ தங்கம் கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. இவையனைத்தும் சென்னை சர்வதேச விமான முனையத்தில் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடையை மையமாக வைத்து நடந்ததாகவும் தெரியவந்தது. இதுதொடர்பாக, கடந்த ஜூன் மாத கடைசியில் அக்கடையை நடத்துபவர், ஊழியர்கள் மற்றும் இலங்கையை சேர்ந்த ஒரு பயணி உள்பட மொத்தம் 9 பேரை சென்னை விமானநிலைய சுங்கத் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்த 267 கிலோ தங்க கடத்தல் பின்னணியில் ஒரு பாஜ பிரமுகர் முக்கியமாக செயல்பட்டதாகவும், அவரது சிபாரிசின்பேரில் இந்த பரிசுபொருள் விற்பனை கடைக்கு இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி வழங்கியதாகவும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்போது நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், கடத்தப்பட்ட 267 கிலோ தங்கத்தில், இதுவரை ஒரு கிலோ தங்கம்கூட கடத்தல்காரர்களிடம் இருந்து சுங்கத்துறையால் மீட்கப்படவில்லை. அதேநேரம், இந்த தங்க கடத்தல் விவகாரம் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக பாஜ பிரமுகர் உள்பட உள்பட பலருக்கு சம்மன்கள் அனுப்பி சுங்கத்துறை விசாரித்து வருகிறது.
இவ்விவகாரம் குறித்து சென்னை விமானநிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர், சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை உயர் அதிகாரிகளை 2 முறை புதுடெல்லிக்கு வரவழைத்து ஒன்றிய நிதியமைச்சக உயர்மட்ட அதிகாரிகள் நேரில் அழைத்து முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது, சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்கம் கடத்தல் விவகாரத்தில் ஏர்இன்டெலிஜன்ஸ் பிரிவினரின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை, அவர்களின் செயல்பாடுகள் முழு தோல்வியில் முடிந்துள்ளது என்றும் அதிகாரிகள் கடும் அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறையின் முதன்மை ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர்கள் என மொத்தம் 5 உயர் அதிகாரிகளை, புதுடெல்லியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சகம் அதிரடியாக கூண்டோடு இடமாற்றம் செய்துள்ளது. மேலும், சென்னை சுங்கத்துறையில் உள்ள துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் என மொத்தம் 7 பேரை புதுடெல்லி, ஐதராபாத், விசாகப்பட்டினம் என பல்வேறு இடங்களுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், இது முதல் பட்டியல்தான் என்றும், அடுத்த ஓரிரு நாட்களில் கூடுதல் பட்டியல் வரவிருக்கிறது. அதில், மேலும் சில உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படலாம் என்றும் தகவல் கூறப்படுகிறது. இது, சென்னை விமானநிலைய அதிகாரிகள், ஊழியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் நடந்த 267 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்வதிலும், சம்பந்தப்பட்ட அனைவரையும் கூண்டோடு கைது செய்வதிலும், அதற்கு துணையாக இருந்தவர்கள்மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் உயர்மட்ட அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. சென்னை விமானநிலையத்தில் 267 கிலோ தங்கம் கடத்தப்பட்டு, அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் நடந்து 3 மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை அந்த கடத்தல் தங்கத்தில் ஒரு கிலோகூட பறிமுதல் செய்யப்படவில்லை. அதோடு, இச்சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் சிலர்மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவேதான், இத்தகைய அதிரடி நடவடிக்கையை ஒன்றிய நிதி அமைச்சகம் எடுத்துள்ளது என்றும் தகவல்கள் கூறப்படுகின்றன.